கிருஷ்ணகிரி: மோரமடுகு அரசு தொடக்கப்பள்ளிக்கு கூடுதலாக ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தி, பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
கிருஷ்ணகிரி மோரமடுகு ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், மோரமடுகு, பாரதி நகர், காந்தி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 75 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர் களுக்கு கல்வி கற்பிக்க, ஒரு தலைமையாசிரியர், உதவி ஆசிரியர் ஆகிய 2 பேர் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாணவ, மாணவிகள் வகுப்பறையில் அமராமல், பள்ளியின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட மாணவர்களின் பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களுக்கு பாது காப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி வட்டாரக் கல்வி அலுவலர்கள் சீனிவாசன், செல்வராஜ் ஆகியோர் மாணவர்களின் பெற்றோர்களிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத் தினர். அப்போது பெற்றோர் கூறுகையில், பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக் குறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
மேலும், மாணவ, மாணவிகள் வகுப்பறையில் இல்லாமல் வெளியே இருக்கின்றனர். குறிப்பாக சாலையோரம் அமைந்துள்ள இப்பள்ளியில் மாணவ, மாணவிகள் வெளியே செல்லும்போது விபத்து அபாயமும், பாதுகாப்பு இல்லாத நிலையும் உள்ளது.
இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளது. இங்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற் கெனவே சிஇஓ, ஏஇஓ அலுவலகங்களில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, என்றனர்.
இதுதொடர்பாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் கூறும் போது, தற்போது வேறு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவர் மாற்றுப்பணியாக இப்பள்ளிக்கு உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றனர். இதில் சமாதானம் அடைந்து பெற்றோர் கலைந்து சென்றனர்.