மதுரையில் நடிகர் செந்தில் பிரச்சாரத்தில் கற்கள் வீசப்பட்டன. அப்போது திமுகவினர், அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக திமுகவினர் 18 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் செல்லூர் கே.ராஜுவை ஆதரித்து நடிகர் செந்தில் நேற்று முன்தினம் இரவு சோலையழகுபுரத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் அதிமுக வுக்கு ஆதரவாக வாக்களிக் கும்படி கேட்டுக் கொண்டார்.
அங்கு திமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால் அங்கிருந்து புறப்பட்டு சென்ற செந்தில், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள் ளார்.
அப்போது சோலையழகுபுரத்தில் ரகளையில் ஈடுபட்ட திமுகவினர் பின்தொடர்ந்து ஜெய்ஹிந்த்புரத்துக்கு சென்று அங்கும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். உடனே நடிகர் செந்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இதனால் திமுகவினர், அதிமுகவினரிடையே அங்கு மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் விரைந்து சென்று இருதரப்பினரையும் சமாதானம் செய்து கலைந்துபோகச் செய்தனர்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகி வீரணன் கொடுத்த புகாரின்பேரில் திமுகவினர் முருகானந்தம், சந்திரன், வாசு, பழனி, செந்தில், காவேரி, மணி, சுந்தர் உட்பட 18 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.