தமிழகம்

பாதுகாப்பு உபகரணம் இன்றி தகரப் பெட்டிகளை கையாளும் பரிதாபம்: தேர்தல் ஆணையம் மனது வைக்குமா?

ஜி.ஞானவேல் முருகன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்துவருகிறது. தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடந்த மாதம் பீஹார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டது.

இவற்றை சரிபார்க்கும் பணி நிறைவடைந்து, தற்போது வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெறுகிறது. அடுத்த கட்டமாக பேலட் பேப்பர் பொருத்தி வாக்குப்பதிவு மையங்களுக்கு இயந்திரங்களை அனுப்ப வேண்டும்.

ஏற்கெனவே தேர்தல் முடிந்த மாநிலங்களில் இருந்து கன்டெய்னர் மூலம் கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய தகரத்தால் ஆன பெட்டிகளை இறக்கி, பாதுகாப்பு அறைக்கு எடுத்துச் செல்வது மற்றும் சரிபார்க்கும் பணி நடைபெறும் இடத்துக்கும், வாக்குப்பதிவு மையத்துக்கும் எடுத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளைச் செய்வதற்கு இத்துறையில் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களையே அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர்.

தேர்தல் வேலைகளில் பல்வேறு தரப்பினர் ஈடுபட்டிருந்தாலும் இந்த விளிம்பு நிலை தொழிலாளர்கள் செய்யும் பணி மிகவும் சிரமமானது.

முழுவதும் தகரத்தால் செய்யப்பட்ட இந்தப் பெட்டிகளின் இருபுறமும் இரும்புக் கம்பியாலான கைப்பிடி இருக்கும். 200 கிலோ எடை வரை இருக்கும் இந்தப் பெட்டியை 2 தொழிலளர்கள் சேர்ந்து தூக்குகின்றனர்.

கைப்பிடி உதவியுடன் தூக்கும்போது விரல்கள் மிகவும் அழுத்தத்துக்கு உள்ளாகிறது. இதைத்தவிர்க்க கை விரல்களை காட்டன் துணியால் சுற்றிக் கட்டிக்கொண்டு இத்தொழிலா ளர்கள் பணியாற்றுகின்றனர்.

தேர்தலைப் பொறுத்தவரை விளம்பரங்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் என எல்லாவற் றிலும் நவீன உத்திகளைக் கடைப்பிடிக்கும் அதிகாரிகள், இத்தொழிலாளர்களின் சிரமத்தைக் குறைக்கும்விதமாக பாதுகாப்பு உபகரணம் வழங்குவதுடன் பெட்டியை இலகுவாக தூக்கிச் சுமக்கும் வகையில், ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து தொழிலாளர் மதிமாறன் கூறும்போது, “'எனக்கு இது 3-வது தேர்தல், மக்களவைத் தேர்தல், ரங்கம் இடைத்தேர்தலில் வேலைசெய்ததால், இப்போதும் என்னை அழைத்துள்ளனர். தேர்தல் இல்லாத நாட்களில் கட்டிட வேலைக்குச் செல்வோம். அங்கு கிடைப்பதைவிட இங்கு சம்பளம் கொஞ்சம் பரவாயில்லை. எங்களுக்கு லோடுமேன் என பெயருடன் கூடிய அடையாள அட்டை கொடுத்துள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரப் பெட்டியைத் தூக்குவது சிரம மில்லை. ஆனால், கைப்பிடியை பிடித்துத் தூக்கும்போது மட்டும் கை வலிக்கும். சில நேரங்களில் பெட்டியின் விளிம்பு பகுதியைப் பிடித்து தோளில் தூக்கிக்கொண்டு சுமந்து செல்வோம். அப்போது, கை விரல்களில் அதிக அழுத்தம் இல்லாமல் இருக்கவும், தகரம் கிழித்து காயம் ஏற்பட்டுவிடாமல் இருக்கவும் காட்டன் துணியை விரல்களில் சுற்றிக்கொள்வோம். கைப்பிடி இருக்கும் இடத்தில் ஏதாவது பிளாஸ்டிக் அல்லது மரக்கட்டை போல பொருத்தினால் எங்களுக்கு கொஞ்சம் வசதியாக இருக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT