புதுச்சேரி: புதுச்சேரியில் விரைவில் மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரி அரசின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக கலையரங்கத்தில் இன்று நடந்தது. புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் துணைநிலை ஆளுநர் தமிழிசை விழாவினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். முதல்வர் ரங்கசாமி, பேரவை தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், "புதுவை பொறியியல் கல்லுாரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. படிக்கும் இடத்துக்கு நற்பெயர் இருந்தால்தான் மாணவர்களுக்கு மரியாதை கிடைக்கும். அவர்களைத்தான் தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யும். இங்கு பணியாற்றும் 200 பேராசிரியர்களில் 120-க்கும் மேற்பட்டோர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். இங்கு 90 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும். இது புதுவை அரசின் முதல் பல்கலைக்கழகம். அடுத்து, மருத்துவ பல்கலைக்கழகத்தை அரசு விரைவில் தொடங்க உள்ளது. இங்கு படித்து பட்டம் பெறும் மாணவர்கள் புதுவைக்கு பெருமை சேர்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், "கரோனா தொற்றுக்கு பிறகு நடைபெறும் விழா. முதல்வர் ரங்கசாமி கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை செலவிட்டு வருகிறார். பட்டம் பெற்றவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தின்படி அரசின் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிரதமர் கூறியபடி பெஸ்ட் புதுவையை உருவாக்கி வருகிறோம். புதுவைக்கு மத்திய அரசு உறுதுணையாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு உறவுப்பாலமாக ஆளுநர் தமிழிசை திகழ்கிறார்" என்று குறிப்பிட்டார்.