திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை சந்தித்து ஆறுதல் கூறி, முதல்வர் அறிவித்த ரூ.5 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். உடன் டிஜிபி சைலேந்திரபாபு, திருநெல்வேலி ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்டோர்.படம்: மு.லெட்சுமி அருண் 
தமிழகம்

நெல்லை அருகே கத்திக்குத்தில் காயமடைந்த பெண் உதவி ஆய்வாளருக்கு அமைச்சர், டிஜிபி ஆறுதல்: முதல்வர் அறிவித்த ரூ.5 லட்சம் நிதியை வழங்கினர்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கத்திக்குத்தில் காயமடைந்த பெண் உதவி ஆய்வாளருக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன், டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் ஆறுதல் கூறி, முதல்வர் அறிவித்த ரூ.5 லட்சம் நிவாரண நிதியை வழங்கினர்.

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மார்க்ரெட் தெரசா. இவர், பழவூர் கிராமத்தில் அம்மன் கோயில் திருவிழாவில் நேற்று முன்தினம் அதிகாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் வாக்குவாதம் செய்து கத்தியால் குத்தியதில் மார்க்ரெட் தெரசாவுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த மாதம் வாகன தணிக்கையின் போது ஆறுமுகம் உள்ளிட்ட 3 பேர் மது போதையில் வாகனம் ஓட்டி வந்துள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வைத்ததால் மார்க்ரெட் தெரசாவை ஆறுமுகம் கத்தியால் குத்தியது தெரியவந்தது. ஆறுமுகம் கைது செய்யப்பட்டர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்ரெட் தெரசாவை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண நிதி ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார், எம்எல்ஏ அப்துல்வகாப், மேயர் பி.எம்.சரவணன், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன் உள்ளிட்டோரும் ஆறுதல் கூறினர்.

டிஜிபி சைலேந்திரபாபு கூறும்போது, “உதவி ஆய்வாளருக்கு ஆறுதல் கூறி, நிவாரண நிதி ரூ.5 லட்சம் வழங்கிய முதல்வருக்கு காவல்துறை சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலமாக குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. காவல் துறையினருக்கு மனநல பயிற்சி அளிக்க அரசு ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT