தமிழகம்

கோவை அருகே பெண் வேண்டுகோள் விடுத்ததும் மின்வேலியை தொடாமல் கடந்துசென்ற யானைக் கூட்டம்

செய்திப்பிரிவு

கோவை: கோவை தொண்டாமுத்தூரை அடுத்த குப்பேபாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு குட்டி மற்றும் 4 யானைகள் கொண்ட கூட்டம் நேற்றுமுன்தினம் மண்மேடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்தது. தகவலின்பேரில் அங்கு வந்த நரசீபுரம் வனத்துறையினர், யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு தோட்டத்து மின்வேலியை நோக்கி யானைகள் வந்தன. இதைப்பார்த்த பெண் ஒருவர், “லைன் கம்பி உள்ளது. வேறு வழியாக யானையை விரட்டுங்கள்” என வன ஊழியரிடம் தெரிவித்தார்.

அதற்கு அவர் “தோட்டத்துக்குள் சென்று லைனை ஆஃப் செய்யுங்கள்” என்றார். “நான் உள்ளே சென்றால் யானைகள் எனக்கு நேராக வரும்” என அந்தப்பெண் தெரிவித்தார்.

பின்னர், யானைக் கூட்டத்தை பார்த்து “வாங்க சாமி, வாங்க. அப்படியே நேரா வந்து இந்த வழியாக போங்க” என்றார். அப்போது, “குட்டி யானை முன்னாடி வருது. லைனை தொட்டால் பிள்ளைக்கு வலிக்குமே” என அந்தப்பெண் ஆதங்கப்பட்டார்.

கூட்டத்தில் இருந்த 2 பெரிய யானைகள் கம்பிகளை தாண்டி கடந்து சென்றன. பின்னால் குட்டியுடன் 2 யானைகள் வந்தன. அதில், ஒரு யானை சாலையை நோக்கி செல்ல தடையாக இருந்த மின் இணைப்பு இல்லாத கம்பிகளை அழுத்தி குட்டியை தாண்டிச் செல்ல உதவின. அதைத்தொடர்ந்து யானைகளும் சாலையை அடைந்து அங்கிருந்து சென்றன. தொடர்ந்து வந்த வனத்துறையினர் வனப்பகுதியை நோக்கி யானைகளை ஜீப் மூலம் விரட்டினர்.

வேண்டுகோளை ஏற்று யானைகள் மின்வேலியை தொடாமல் சென்றதால் அந்த பெண்ணும், வனத்துறையினரும் நிம்மதி அடைந்தனர். இக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, “மருதமலை பகுதியில் சுற்றி வந்த இந்த யானை கூட்டம் தற்போது குப்பேபாளையம் பகுதியில் முகாமிட்டுள்ளது” என்றனர்.

SCROLL FOR NEXT