ஓசூர்: ஓசூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சானமாவு காப்புக்காட்டில் கடந்த சில நாட்களாக ஒரு யானை தனது குட்டியுடன் முகாமிட்டுள்ளது. இந்த யானை இரவு நேரத்தில்உணவு மற்றும் குடிநீர் தேடி அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் சுற்றி வருகிறது.
இதுதொடர்பாக ஓசூர் வனச்சரகர் ரவி கூறியதாவது:
ஓசூர் வனச்சரகத்தில் உள்ள சானமாவு காப்புக்காடு அருகே முகாமிட்டுள்ள ஒரு பெரிய யானை மற்றும் குட்டி யானையை கண்காணிக்க தலா 7 பேர் கொண்ட 2 குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த யானையால் சானமாவு, பீர்ஜேப்பள்ளி, நாயக்கனப்பள்ளி ஆகிய கிராமங்களில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. பயிர் சேதம் குறித்து மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சானமாவு காப்புக்காட்டை ஒட்டியுள்ள போடூர்பள்ளம், சானமாவு, பீர்ஜேப்பள்ளி, நாயக்கனப்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் இரவு நேர காவல் பணி, கால்நடை மேய்ச்சல்,விறகு சேகரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு காப்புக்காடுகளின்அருகே செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.