தேன்கனிக்கோட்டை அடுத்த பிக்கனப்பள்ளி சிக்கம்மா தொட்டம்மா கோயில் திருவிழாவில், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர். 
தமிழகம்

பிக்கனப்பள்ளி கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு

செய்திப்பிரிவு

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த பிக்கனப்பள்ளி கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த சிக்கம்மா தொட்டம்மா கோயில் திருவிழாவில் மூன்று மாநில பக்தர்கள் பங்கேற்று தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

இதையொட்டி, தேன்கனிக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட கிராம தேவதைகள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் டொல்லு குணிதா, வீரகாசை, விரபத்ர குணிதா ஆகிய பாரம்பரிய நடனத்துடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக பிக்கனப்பள்ளி கோயிலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதையொட்டி, சிக்கம்மா தொட்டம்மா கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், கங்கை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காளை மாடுகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது. கிராம தேவதைகளை வரிசையாக வைத்து சிறப்பு பூஜைகள் நடத்திய பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவிழாவில், தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

SCROLL FOR NEXT