தமிழகம்

முருங்கைக் காய் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி

செய்திப்பிரிவு

சென்னை: கோயம்பேடு தந்தையில் கடந்த சில ஆண்டுகளாக முருங்கைக்காய் வரத்து குறைந்து அதன் விலை கிலோ ரூ.140 வரை உயர்ந்து இருந்தது. எப்போதும் ரூ.100-க்கு குறையாது.

இந்நிலையில் தற்போது அதன் விலை வீழ்ச்சி அடைந்து ரூ.8-க்கு விற்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் கிலோ ரூ.3-க்கு கேட்பதால், காய் பறிப்பு கூலி கூட வரவில்லை எனக்கூறி, முறுக்கைக்காய்களை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முருங்கைக்காய் விலை வீழ்ச்சி தொடர்பாக கோயம்பேடு சந்தை மொத்த வியாபாரிகள் கூறியதாவது:

முருங்கைக்காய் வெயில் காலங்களில் அதிக மகசூல் கொடுக்கக்கூடியவை. இச்சந்தைக்கு வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, ஆந்திர மாநிலம் சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் முருங்கைக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வந்த நிலையில், முருங்கை பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் கோடை தொடங்கிய நிலையில் கோயம்பேடு சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.அடுத்த ஓரிரு மாதங்களில் விலை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT