தமிழகம்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.80 கட்டாய வசூலால் விவசாயிகள் வேதனை

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.50 முதல் 80 வரை ஒரு மூட்டைக்கு வசூல் செய்யப்படுகிறது. இதுவரை சுமார் ரூ.9 கோடிக்கு மேல் கட்டாய வசூல் செய்யப்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஆண்டு மழைப் பொழிவு நன்றாக இருந்ததால் அனைத்து ஏரிகளும் நிரம்பின. இதனால், 25 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு மாவட்டம் முழுவதும் நெல் விளைச்சல் சிறப்பாக இருந்தது. விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய அரசு சார்பில் 89 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதற்கு விவசாயிகளிடம் சிறந்த வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளிடமிருந்து மூட்டை ஒன்றுக்கு, ரூ.50 முதல் ரூ.80 வரை வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், பணம் தர மறுக்கும் விவசாயியின் நெல்லில், “ஈரப்பதம் அதிகமாக உள்ளது. கல், மண் உள்ளது” எனக் கூறி, நிலைய கண்காணிப்பாளர்கள், ஊழியர்கள் அலைக்கழிக்கின்றனர். இதற்கு பயந்து விவசாயிகளும் வேறு வழியின்றி, கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர் என்றனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளான முருகதாஸ், லிங்கேசன், ராஜசேகர் உள்ளிட்டோர் கூறியதாவது:

3 மாதங்களாக இரவு, பகலாக கஷ்டப்பட்டு, பாதுகாத்து, அறுவடை முடிந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக நெல்லை கொண்டு வந்தால், மூட்டை ஒன்றுக்கு ரூ.80 வரை வசூல் செய்கின்றனர். நெல்லை திரும்ப எடுத்துச் செல்ல முடியாத சூழல் உள்ளதால், அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டியுள்ளது. இதுவரை ஏஜென்டுகள் மற்றும் அதிகாரிகள் துணையுடன், ரூ.9 கோடிக்கு மேல் கட்டாய வசூல் செய்துள்ளனர்.

கோணிக்கும், நெல்லை தூற்றி மூட்டை கட்டி லாரியில் ஏற்றுவதற்கும், எடுத்து செல்லவும் ௭ன பல காரணங்களை கூறி, அதிகாரிகள் முதல் உள்ளூர் ஆளும் கட்சியினர் வரை வசூல் பணத்தை பிரித்துக்கொள்கின்றனர். தட்டிக் கேட்டால் விவசாயிகளை மிரட்டுகின்றனர். விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதிகாரிகள் கூறும்போது “அரசு கோணியை இலவசமாக வழங்குகிறது. நெல்லை தூற்றி கோணிப்பையில் அடைத்து லாரியில் ஏற்றுவது வரை, அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. அதிகாரிகள் பணம் எதுவும் பெறுவதில்லை” எனத் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT