உளுந்தூர்பேட்டையில் சிதிலமடைந்த குடியிருப்பில் வசிக்கும் நரிக்குறவர் குடும்பத்தினர். 
தமிழகம்

உளுந்தூர்பேட்டையில் சிதிலமடைந்த கட்டிடத்தில் பயத்துடன் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தினர்

ந.முருகவேல்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் 38 ஆண்டுகளுக்கு முன்பு, நரிக்குறவர் சமூகத்தினருக்கு அரசால் வழங்கப்பட்ட குடியிருப்புக் கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. தற்போது இதில் அவர்கள், பயத்துடன் வசித்து வரு கின்றனர்.

உளுந்தூர்பேட்டை நகராட்சியில் உள்ள 6-வது வார்டில், உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலை மார்க்கத்தில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 250 நரிக்குறவ சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், கதவு ஜன்னல்களின்றி, சுவர்கள் இடிந்தும், மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தில் குடும்பத்தினரோடு வசித்து வருகின்றனர். இதில், சிதிலமடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரிடம் அதுகுறித்து கேட்டபோது, "கடந்த 1984-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் பரிந்துரையின் பேரில் எங்கள் சமூகத்தினருக்கு ஒன்றரை ஏக்கர் நிலத்தில் 32 குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

கட்டிடம் போதிய தரமாக கட்டப்படாததால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு, ஒவ்வொன்றாக இடிந்து விழுந்து வருகிறது. கதவுகள், ஜன்னல்கள் இல்லை. மேற்கூரையில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. மரச்சட்டங்களை கட்டிடத்திற்கு முட்டுக் கொடுத்து இரவில் அச்சத்துடனே குழந்தைகளை வைத்துக் கொண்டு உறங்குகிறோம். இரவில் பாம்பு போன்ற விஷ பூச்சிகளின் நடமாட்டம் இருக்கிறது. எனவே கட்டிடத்தை இடித்துவிட்டு புதுக் கட்டிடம் கட்டிக் கொடுக்கக் கோரி கடந்த 10 வருடங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுவரை யாரும் முயற்சி எடுக்கவில்லை.

நகராட்சிப் பகுதியில் வசிப்பதால் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழாவது கட்டிக் கொடுங்கள் எனக் கேட்டபோது, அத்திட்டம் நகரப் பகுதிக்கு பொருந்தாது என தட்டிக் கழிக்கின்றனர். தற்போதைய முதல்வர் நரிக்குறவ சமூகத்தினரின் வாழ்க்கைத் தரம் உயர பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். ஊரகப் பகுதியில் வசிக்கும் எங்களின் நிலையையும் அறிந்து, எங்களின் கோரிக்கையை பரிசீலித்து சிதிலமடைந்த கட்டிடங்களை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி ஆட்சியர் பி.என். தரிடம் கேட்டபோது, "அவர்கள் குடியிருப்புத் தொடர்பாக குடிசை மாற்று வாரியத் துறையின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் கொடுக்கலாம் எனில், அவர்கள் பங்களிப்புத் தொகை செலுத்தவேண்டும். மேலும் நகர்ப்புறம் என்பதால் பிரதமர் வீடு கட்டும் திட்டம் அங்கு செயல்படுத்த முடியாது. எனவே மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT