நாராயணசாமிக்கு எதிராக எவ்வித போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தன் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அரசுப் பேருந்துகள் உடைக்கப் பட்டன. போலீஸார் தடியடி நடத்தியதில் 3 பேர் காயமடைந்தனர்.
இந்த எதிர்ப்பு தொடர்ந்து வரும் நிலையில், நமச்சிவாயம், 'நாராயணசாமிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்' என்று தன் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' புதுவை முதல்வராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாராயணசாமிக்கு வாழ்த்துக்கள். அவருக்கு எதிராக யாரும் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது.
சனிக்கிழமை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் ஷீலா தீட்சித், முகுல்வாஸ்னிக்கும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தை கேட்டறிந்தனர். அதற்குப் பிறகு சோனியா காந்தியிடம் புதுவை நிலவரத்தை எடுத்துக் கூறினார்கள். எனவே, கட்சித் தலைமையின் படி புதுவை முதல்வராக நாராயணசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாராயணசாமிக்கு எதிராகப் போராடாமல் அனைவரும் அமைதி காக்க வேண்டும். யாரும் வன்முறையைக் கையில் எடுக்க வேண்டாம். விரும்பத்தகாத செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.
புதுவையில் காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது. எப்போதும் ஒற்றுமையாக இருக்கும்'' என்று நமச்சிவாயம் கூறினார்.