நாகர்கோவில்: மத உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக இந்து மகாசபா மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே காப்புக்காட்டில் கடந்த 17-ம் தேதி நடந்த இந்து மகாசபா நிர்வாகிகள் கூட்டத்தில், இந்து மகாசபா மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் பேசினார். அப்போது, மத உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக, அவர்மீது தக்கலை டிஎஸ்பி கணேசன் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாலசுப்பிரமணியன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
ஈத்தாமொழி பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியனின் வீட்டுக்கு நேற்று காலை போலீஸார் சென்று, அவரை கைது செய்தனர். மருத்துவப் பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்பட்டபோது, இந்து மகாசபா நிர்வாகிகள் அங்கு திரண்டு எதிர்ப்பு கோஷம் எழுப்பினர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.