தமிழகம்

ஊழல் செய்வதற்காக செயற்கையாக மின் வெட்டு: பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கோவை: தமிழகத்தில் ஊழல் செய்வதற்காக செயற்கையாக மின்வெட்டை உருவாக்கி, மத்தியஅரசு மீது பழி போடுவதை ஏற்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் மிகப்பெரும் நஷ்டத்தில் உள்ள நிறுவனங்களில் முதன்மையானதாக தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளது. எந்தஅமைச்சர் வந்தாலும் பணம்சம்பாதிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள துறையாக மாறியுள்ளது. அதனால்தான் தற்போதுபல லட்சம் கோடி ரூபாய்கடனில் உள்ளது. இத்தகையநிலைக்கு தமிழக ஆட்சியாளர்கள் கொண்டுவந்துவிட்டு, மத்திய அரசின் மீது பழியைப் போடுகிறார்கள்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் 2 முதல் 3 மணி நேரம் மின் வெட்டு இல்லாதபோது, தமிழகத்தில் மட்டும் 8 முதல் 10 மணி நேரம் மின் வெட்டை வைத்துக் கொண்டு யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்?

தமிழகத்தில் கடந்த 20-ம்தேதி தூத்துக்குடி மின் நிலையத்தில் 4 மின் உற்பத்தி பிரிவுகள் செயல்படவில்லை. போதுமான மின் தேவை இல்லாததால் நிறுத்தியுள்ளோம் என்ற தகவலை மத்திய அரசின் நிறுவனமான பவர்கிரிட் நிறுவனத்துக்கு தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது. 20-ம் தேதி தூத்துக்குடி மின் நிலையத்தில் 5 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் இருந்தும் ஏன் உற்பத்தியை தமிழகஅரசு நிறுத்தி வைத்திருந்தது?

தமிழகத்தில் செயற்கையாக மின்வெட்டை உருவாக்கி,அதன் மூலமாக தனியாரிடம்இருந்து மின்சாரம் வாங்கிலாபம் பார்ப்பது திமுகவுக்குகைவந்த கலை. கடந்த ஆண்டில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் தமிழ்நாடு மின்சார வாரியம் தனியாரிடமிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கிஉள்ளது. இவர்களது நோக்கமே மின்சாரத்தை தனியாரிடமிருந்து வாங்கி, ஊழல் செய்யவேண்டும் என்பதுதான். சொந்தமாக மின் உற்பத்தி செய்யநடவடிக்கைகளை திமுக எடுக்கவில்லை. மத்திய அரசைப் பொறுத்தவரை எந்தமாநிலத்துக்கும் நிலக்கரியை குறைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

இளையராஜா ஒரு சமுத்திரம் போன்றவர். அவரை குறைத்து மதிப்பிடக்கூடாது. அவருக்கு ‘பாரத ரத்னா’ கிடைக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரிஇல்லை. ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இவ்விவகாரத்தில் தமிழக காவல் துறை உரிய முறையில் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT