திருவாரூர்: நாகையை உள்ளடக்கிய தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மீண்டும் அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
மத்திய அரசு சுற்றுச்சூழல் துறையின் மூலம் தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களிலும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஹைட்ரோகார்பன் எடுக்க பல்வேறு கட்டங்களாக ஏலம் விடப்பட்டுள்ளது.
இதில் கடந்த 2017-ம் ஆண்டு நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதியை உள்ளடக்கிய தரை மற்றும் கடலோரப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம் ஏலத்துக்கு எடுத்தது.
இப்பகுதியில் பணிகளைத்தொடர அனுமதி கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடந்த 2019-ல் வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. அந்த விண்ணப்பம் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2020 ஜனவரி மாதம் இதுபோன்ற சுற்றுச்சூழல் அனுமதியை, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் வேதாந்தா நிறுவனமானது, தான் ஏலம் எடுத்துள்ள நாகை, காரைக்கால் பகுதிகளில் 137 ஆய்வுக் கிணறுகளும், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதிகளில் 102 ஆய்வுக் கிணறுகளும் அமைக்க அனுமதி கேட்டுமாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு கடந்த 5-ம் தேதி விண்ணப்பித்துள்ளது.
மீன்வளம் பாதிப்பு
இதுகுறித்து ஹைட்ரோ கார்பன்திட்டங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் வ.சேதுராமன் கூறியதாவது:
வேதாந்தா நிறுவனம் தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு, தான் ஏலம் எடுத்துள்ள தரைப்பகுதிகளை தவிர்த்துவிட்டு, கடல் பகுதிக்கு மட்டும் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருப்பதன் நோக்கம், எப்படியாவது கருத்துகேட்பு இல்லாமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகம், புதுச்சேரி உள்ளடக்கிய ஆழ்கடலற்ற பகுதியில் நிறைவேற்றிவிட வேண்டும் என்பதுதான். இதற்கு அனுமதி கொடுத்தால், கடலில் உள்ள மீன்வளம் உள்ளிட்ட அனைத்து வளங்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
சாதகமான முடிவு வேண்டும்
எனவே தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் விண்ணப்பத்தை தீவிர பரிசீலனை செய்து நிராகரித்ததைப் போன்று வேதாந்தாநிறுவனத்தின் விண்ணப்பத்தையும் பரிசீலிக்க வேண்டும் என்றார்.
இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு சாதகமான முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும் என டெல்டா பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.