ஈரோடு: பெருந்துறை அருகே மாணவர்கள் கழிவறையைச் சுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முள்ளம் பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உள்ள கழிப்பறையை, மாணவர்கள் சிலர் சுத்தம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, வட்டாரக் கல்வி அலுவலர் அமுதா, பள்ளிக்கு நேரடியாகச் சென்று பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் மாணவர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து பெருந்துறை மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில், பள்ளி தலைமை ஆசிரியை மைதிலி மற்றும் ஆசிரியை சுதா ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து பெருந்துறை வட்டாரக் கல்வி அலுவலர் அமுதா நேற்று உத்தரவிட்டுள்ளார்.