சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் கவுன்சிலர்களுக்கான நிர்வாகப் பயிற்சி முகாம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்து, கவுன்சிலர்களுக்கான பயிற்சிக் கையேட்டை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:
கவுன்சிலர்கள் சரியாகச் செயல்பட்டால், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்களை விட சிறப்பான மரியாதையை மக்கள் தருவார்கள். கவுன்சிலர்கள் சிறப்பாகச் செயல்பட நிதி தேவை. தேவையான நிதியைக் கொண்டுவந்து சேர்ப்பது எங்கள் கடமை.
அனைத்து மாநகராட்சிகளுக்கும் முன்மாதிரியான மாநகராட்சியாக சென்னையை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதனால், பிற மாநகராட்சிகளைக் காட்டிலும், சென்னை மாநகராட்சிக்கு சிறப்புச் சலுகையாக கூடுதல் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அரசு கூறுவதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டும் சிறந்த பணி அல்ல. பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவற்றை மாமன்றத்தில் தெரிவித்து, உரிய தீர்வுகண்டு, மக்களைத் திருப்தியாக வைத்துக்கொள்வதுதான் சிறந்த பணியாகும். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால், எப்போதும் உங்களை மறக்க மாட்டார்கள்.
இவ்வாறு அமைச்சர் நேரு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர் சிவ் தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.