தமிழகம்

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்: வெப்பம் அதிகரிக்கும்

செய்திப்பிரிவு

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. அடுத்த 2 நாட்களில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கடும் கோடைக் காலம் இன்று தொடங்கி 28-ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறும்போது, “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவுவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும். கடந்த ஏப்ரல் மாதத்தில் 60 சதவீத நாட்களில் இயல்பைவிட 2 டிகிரி முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கூடுதலாகும். அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும்.

அதேநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்” என்றார்.

சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸா கவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

தமிழகத்தில் நேற்று பகல் நிலவரப்படி வேலூர் மற்றும் கரூர் பரமத்தியில் அதிகபட்ச மாக 107.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதி வானது. மாலை நிலவரப்படி கரூர் பரமத்தி, திருச்சி, வேலூர், சேலம், திருப்பத்தூர், தருமபுரி, மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவானது. சென்னை விமான நிலையத்தில் 101.48 டிகிரி பாரன்ஹீட்டும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 97.16 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது.

SCROLL FOR NEXT