சென்னை: பூங்கா பராமரிப்பு, சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து துறை பணிகளிலும் மாமன்ற உறுப்பினர்கள் துணையாக இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 200 கவுன்சிலர்களுக்கான நிர்வாக பயிற்சி இன்று காலை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு. மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி துறை வாரியாக மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக கவுன்சிலர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இந்த பணியாளர்களுக்கு கவுன்சிலர்கள் எவ்வாறு உதவ வேண்டும் என்பது தொடர்பாக கருத்துகள் பகிரப்பட்டது. துறை ரீதியாக மாமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள் பின்வருமாறு:
மின்சாரத்துறை
அனைத்து தெரு விளக்குளையும் எல்இடி விளக்குகளாக மாற்றும் பணிகளில் உறுதுணையாக இருக்கலாம்
இரவு நேரங்களில் ஆய்வு மேற்கொண்டு பழுது ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்.
தானியங்கி முறையில் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கலாம்
திடக்கழிவு மேலாண்மை
பணியாளர்கள் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்து தகவல் தெரிவிக்கலாம்
குப்பைகள் தரம் பிரிப்பு, உரம் விற்பனை ஆகிவைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்
குப்பைகள் முறையாக அகற்றப்படுவதை உறுதி செய்யலாம்
பொது சுகாதாரத்துறை
மலேரியா பணியாளர்களின் வருகை பதிவேட்டை தினசரி காலை ஆய்வு செய்யலாம்
கொசு ஒழிப்புப் பணியில் அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கலாம்
புறநோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்
மருத்துவமனைகளை மேம்படுத்த நிதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கலாம்
கல்வித்துறை
கூடுதல் வகுப்பறை கட்ட நிதி பெற்றுத் தரலாம்
பொருட்கள் வாங்க என்ஜிஓ மூலம் நிதி பெற்றுத் தரலாம்
தேர்ச்சி விகிதம் அதிகரிக்க உறுதுணையாக இருக்கலாம்
குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை கண்காணித்து தகவல் தெரிவிக்கலாம்
பூங்கா
திறந்தவெளி நிலங்களில் (ஓஎஸ்ஆர்) பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கலாம்
பூங்கா முறையாக திறக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கலாம்
முறையாக பராமரிப்பு உள்ளதா என்பதைக் கண்காணிக்கலாம்
அதிக மரங்களை நட உறுதுணையாக இருக்கலாம்.