சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது.
இதற்கு துறையின் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார். முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியது: "அரசினுடைய நலத்திட்டங்கள் கடைகோடி மனிதர்களையும் சென்றடையும். திமுக ஆட்சி அமைக்கும்போதெல்லாம் உள்ளாட்சிகளின் உரு சிதையா வண்ணம், உயர்த்தி வலிமைப்படுத்துவதில் தனிகவனம் செலுத்தி வருகிறோம். அதற்கேற்ப திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருவதை, மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.
உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் ஒளிவு மறைவற்ற வெளிப்படத்தன்மையினை ஏற்படுத்திடவும், உள்ளாட்சி அமைப்பின் சாதனைகள் மற்றும் திட்ட செயலாக்கங்கள் குறித்து, தகவல், கல்வி மற்றும் தொடர்பு இயக்கங்கள் நடத்திட ஏதுவாக ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தினத்தை உள்ளாட்சிகள் தினம் என்று கொண்டாட வேண்டுமென்று, நான் துணை முதல்வராக இருந்தபோது முடிவு மேற்கொள்ளப்பட்டது.
2007 நவம்பர் 1-ம் நாள் அன்று உள்ளாட்சி தினமாக கொண்டாடப்பட்டது. இறுதியாக 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் கொண்டாடப்பட்டு, அதன்பின்னர் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. கிராமப்புற மக்களிடம் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படத்தன்மையை உறுதி செய்திடவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும், இடையில் நிகழ்த்தப்படாமல் போன இந்த நிகழ்வு, மக்கள் இயக்கமாக மீண்டும், நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்" என்று அவர் கூறினார்.