தமிழகம்

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளை மேற்பார்வையிட மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரி நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11, 12-ம்வகுப்புகளுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில் பொதுத் தேர்வு பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணை:

மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க பள்ளிக்கல்வி அதிகாரிகள், இயக்குநர்கள், இணை இயக்குநர்களை 38 மாவட்டங்களுக்கு பொறுப்பு அலுவலர்களாக நியமிக்க தேர்வுத் துறை இயக்குநர் பரிந்துரைத்துள்ளார்.

அதன்படி, மாவட்ட வாரியாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் இரா.சுதன் (தூத்துக்குடி), பாடநூல் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டி.மணிகண்டன் (கோயம்புத்தூர்) தேர்வுத் துறை இயக்குநர் சேதுராமவர்மா (சென்னை), தொடக்கக்கல்வி இயக்குநர் க.அறிவொளி (செங்கல்பட்டு), எஸ்எம்சி கூடுதல் திட்ட இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் (காஞ்சிபுரம்), பாடநூல் கழக செயலர் ச.கண்ணப்பன் (திருச்சி), பள்ளிக் கல்வி இணை இயக்குநர் நரேஷ்(கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்) ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு பணிகள், ஏற்பாடுகள், பறக்கும் படை செயல்பாடுகள் உள்ளிட்டஅம்சங்களை இவர்கள் மேற்பார்வையிட்டு அறிக்கை அளிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT