தமிழகம்

திமுக ஆட்சி அமைப்பது உறுதி: தேர்தலில் போட்டியிடாதது வருத்தம் அளிக்கவில்லை - க.அன்பழகன் சிறப்புப் பேட்டி

எம்.சரவணன்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாதது வருத்தம் அளிக்கவில்லை என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

95 வயதாகும் அன்பழகன், திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்துக்கு இடையே அவர், ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

95 வயதில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது எப்படி இருக்கிறது?

மாணவப் பருவத்தில் இருந்து ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக, எங்களை வளர்த்தெடுத்த திமுக என்ற இயக்கத்துக்காக பிரச்சாரம் செய்கிறோம் என்ற எண்ணமே பெருமகிழ்ச்சியைத் தருகிறது.

உங்கள் முதல் தேர்தல் பிரச்சார அனுபவம் எப்படி இருந்தது?

1957-ல் சென்னை எழும்பூர் தொகுதியில் முதன்முதலாக அண்ணா என்னை வேட்பாளராக நிறுத்தினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து திமுக மேடைகளில் பேசியது எனக்கு கை கொடுத்தது. அந்த அனுபவமும், அண்ணாவின் பிரச்சாரமும் என்னை வெற்றி பெறச் செய்தன.

1957 தேர்தலுக்கும் இன்றைய தேர்தலுக்குமான வித்தியாசங் களை உணர முடிகிறதா?

கடந்த 60 ஆண்டுகளில் தேர்தல் களம் தலைகீழாக மாறியுள்ளது. அன்று தேர்தல் என்பது திருவிழா போல நடந்தது. ஆனால், இப் போது தேர்தல் பரபரப்பு இல்லை. மக்களையும் திரட்ட வேண்டியிருக் கிறது. தொலைக்காட்சி, இணை தள ஊடகங்கள் மக்களைச் சந்திப்பதை எளிதாக்கியுள்ளது. வாக்களிக்க பணம் கொடுப்பது ஜனநாயகத்தை விலைக்கு வாங் கும் செயலாகும். இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

உடல்நிலை சரியில்லாதபோதும் கருணாநிதி வேனில் பிரச்சாரம் செய்கிறார். இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

கருணாநிதியின் ஆர்வமும், உழைப்பும் வியப்பைத் தரு கிறது. திமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதற் காக உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் அவர் பிரச்சாரம் செய்கிறார். கடந்த பல தேர்தகளைப் போல இந்தத் தேர்தலிலும் அவர்தான் தேர்தல் கதாநாயகனாக இருக்கிறார்.

ஸ்டாலினின் பிரச்சாரம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் 234 தொகுதிகளிலும் மக்களுடன் கலந்துரையாடி திமுகவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். ஓய்வின்றி அவர் பிரச்சாரம் செய்வதைப் பார்க்கும்போது கடந்த காலங்களில் கருணாநிதியின் உழைப்பை நினைவுபடுத்துகிறது. கருணாநிதி, ஸ்டாலின் இருவரது பிரச்சாரமும் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக, திமுகவுக்கு நாங்கள்தான் மாற்று என மக்கள் நலக் கூட்டணியும், பாமகவும் பிரச்சாரம் செய்கிறதே?

தேர்தல் களத்தில் 3-வது அணி, 4-வது அணியை எங்கும் பார்க்க முடியவில்லை. அதிமுகவுக்கு மாற்று திமுக. திமுகவுக்கு மாற்று அதிமுக. பலமுனைப் போட்டி என்பது திமுகவுக்கு சாதமாகமாகவே இருக்கும்.

திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டதாக மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக தலைவர் கள் குற்றம்சாட்டி வருகிறார்களே?

தமிழகத்தின் வளர்ச்சிக்கு திராவிட இயக்கங்களின் பங்களிப்பை யாரும் மறைக்க முடியாது. திமுகவுக்கு எதிராக எதுவும் கூற முடியாதவர்கள் வைக்கும் வலுவற்ற வாதம் இது.

இந்தத் தேர்தலில் போட்டியிடாதது வருத்தம் அளிக்கவில்லையா?

வயதாகிவிட்டதால் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் எந்த வருத்தமும் இல்லை. கட்சிக்காக பிரச்சாரம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அதிமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். பிரச்சாரத்தின்போது இதனை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

இவ்வாறு க.அன்பழகன் கூறினார்.

SCROLL FOR NEXT