சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு தனி நிதியம் ஏற்படுத்த வேண்டும் என பேரவையில் திமுக உறுப்பினர் உதயநிதி கோரிக்கை விடுத்தார். அவர் வைத்த கோரிக்கைககள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று சமூகநலன், மகளிர் உரிமைத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டுதான் திருநங்கைகளை மாற்று பாலினத்தவர் என்று அங்கீகரித்தது. ஆனால், கருணாநிதி 2008-ம் ஆண்டிலேயே திருநங்கையர் என பெயர் சூட்டி, வாரியம் அமைத்து, அடையாள அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார்.
தமிழகத்தில் அதிகபட்சம் 25 ஆயிரம் திருநங்கையர் இருப்பார்கள். ஆனால், இதுவரை சுமார் 13 ஆயிரம் பேர்தான் திருநங்கையர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அனைத்து திருநங்கைகளையும் வாரியத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கையர் அனைவரையும் ஆதரவற்றவர்கள் என கருதி அவர்களுக்கு மாத உதவித் தொகை வழங்க வேண்டும். மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளில் திருநங்கையருக்கு இடம் ஒதுக்க வேண்டும்.
ஊனமுற்றோர் நலத்துறை என இருந்ததை ‘மாற்றுத் திறனாளிகள்’ துறை என்று பெயர் மாற்றம் செய்து, அவர்களுக்கு தனி வாரியம் அமைத்து, வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது கருணாநிதிதான். மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்வி கற்கும்20-க்கும் மேற்பட்ட சிறப்புப் பள்ளிகளில் தேவையான ஆசிரியர்களை நியமித்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடியதாக அவற்றை தரம் உயர்த்த வேண்டும்.
நம் சட்டம் 21 வகை மாற்றுத் திறனாளிகளை அங்கீகரிக்கிறது. இவர்களுக்கான பணியிடங்களை அரசு, தனியார் துறைகளில் நாம் கண்டறிய வேண்டும். இதற்காக முழு நேர ஆணையம் அமைக்க வேண்டும் ‘தாட்கோ’போல மாற்றுத் திறனாளிகளுக்கு தனி நிதியம் உருவாக்கித் தரவேண்டும். எல்லா பல்கலைக்கழகங்களிலும் மாற்றுத் திறனாளிகள் குறித்த ஆய்வு மற்றும் கற்பித்தலுக்கான துறையை கருணாநிதி பெயரில் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருணாநிதியின் வழியில்...
அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கருணாநிதி முதல்வராக இருந்தபோது மாற்றுத் திறனாளிகள் நலத் துறையை தன் கையில் வைத்துக்கொண்டு எவ்வாறு பணியாற்றினாரோ, அதேவழியில் நின்று, இன்றைக்கு நானும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இங்கே அதிமுக எம்எல்ஏ அருண்குமார், திமுக எம்எல்ஏ உதயநிதி ஆகியோர் மாற்றுத் திறனாளிகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். அந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் நிச்சயமாக, உறுதியாக படிப்படியாக நிறைவேற்றுவேன்.
மாற்றுத் திறனாளிகளுக்கென்று அமைக்கப்பட்டிருக்கும் ஆணையரகத்துக்கு நானே நேரடியாக சென்று, தொடர்புடைய அமைப்புகளின் நிர்வாகிகளை அழைத்துப் பேசுவேன். அவர்களுக்கு உள்ள பிரச்சினைகள், தீர்க்கப்பட்டவை, இன்னும் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக மிக விரைவிலே ஒரு பெரிய ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
பேச்சை ரசித்த குடும்பத்தினர்
உதயநிதி பேசும்போது அவரது தாய் துர்கா, மனைவி கிருத்திகா ஆகியோர் பேரவையின் தெற்கு மாடத்தில் அமர்ந்திருந்தனர். சுமார் 30 நிமிடங்கள் பேசிய உதயநிதியின் உரையை மாடத்தில் இருந்தவாறு அவர்கள் ரசித்தனர்.