தமிழகம்

எம்ஜிஆர் மாளிகை நோக்கிதான் எப்போதும் எங்கள் கார் செல்லும்: உதயநிதிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்

செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் உதயநிதி பேசியதாவது: கடந்த ஆண்டு இந்த அவையில் நான் பேசும்போது, நீங்கள் (எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி) வெளிநடப்பு செய்துவிட்டீர்கள். நேற்றும் வெளிநடப்பு செய்துவிட்டீர்கள். இன்று நான் பேசுகிறேன் என்பதற்காக வெளிநடப்பு செய்துவிடுவீர்கள் என்றுநினைத்தேன். அப்படி செய்யாததற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளிநடப்பு செய்துவிட்டு சென்றாலும், தவறுதலாக எனது காரில்தான் ஏற முயன்றீர்கள். நீங்கள் மட்டுமல்ல, நானும் 3 நாட்களுக்கு முன்புஉங்கள் காரில் ஏற சென்றிருக்கிறேன். அடுத்தமுறை நீங்கள் தாராளமாக என் காரை எடுத்துச் செல்லலாம். ஆனால், தயவு செய்து கமலாலயம் (பாஜக மாநில தலைமை அலுவலகம்) சென்றுவிடாதீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார். இதனால் அவை முழுவதும் சிரிப்பலை எழுந்தது.

அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, ‘‘எங்கள் கார் எப்போதும் எம்ஜிஆர் மாளிகை (ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம்) நோக்கிதான் செல்லும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் பதிலுக்கு உதயநிதி நன்றி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT