தமிழகம்

மேட்டுப்பாளையம் புறவழிச்சாலை திட்டம் மேலும் தாமதமாகும்; 8 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு

பெ.ஸ்ரீனிவாசன்

கோவை: மேட்டுப்பாளையம் புறவழிச்சாலை திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை வசம், மாநில அரசு ஒப்படைத்துள்ளதால் திட்டம் நிறைவேற மேலும் பல ஆண்டுகள் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் நகரமானது காய்கறி வர்த்தகத்துக்கான முக்கிய மையம்என்பதோடு நீலகிரி மாவட்டத்துக்கான நுழைவு வாயிலாகவும் உள்ளது. இதனால் மேட்டுப்பாளை யத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது நீண்ட கால பிரச்சினையாக உள்ளது. உதகை, கோத்தகிரி, கோவை, சத்தியமங்கலம், அவிநாசிமார்க்க சாலைகளில் மணிக்கணக்கில் வாகனங்கள் காத்திருப்பது வழக்கமாகி விட்டது. உதகைக்கு சுற்றுலாவுக்காக செல்லும் வாகனங்கள், காய்கறி ஏற்றிய வாகனங்கள், இட நெருக்கடி, குறுகலான சாலைகள் இதற்கு முக்கிய காரணமாக உள்ளன.

புறவழிச்சாலை திட்டம்

மேட்டுப்பாளையம் சாலை தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், (என்.எச். 67, தற்போது 181 என மாற்றப் பட்டுள்ளது), போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் புறவழிச்சாலை அமைக்க கடந்த 2005-ம் ஆண்டு தேசிய நெடுஞ் சாலைகள் ஆணையம் திட்டமிட்டது.

அவிநாசி சாலை நீலாம்பூரி லிருந்து நரசிம்மநாயக்கன்பாளையம், குட்டையூர், சிக்கதாசம்பாளையம், ஓடந்துறை வழியாக கோத்தகிரி மற்றும் உதகை செல்லும் சாலைகளை சென்றடையும் வகையில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் 2007-ல் தொடங்கின.

இதன்மூலம் சென்னை, சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து உதகை செல்லும் வாகனங்கள் கோவைக்குள் வரவேண்டியதில்லை என்பதால், கோவை நகரிலும் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதில், நரசிம்மநாயக்கன்பாளை யத்தில் கோவை - மேட்டுப்பாளை யம் பிரதான சாலையுடன் சந்திக்கும்இடத்தில் சுங்கச்சாவடி அமைக்கஆணையம் முடிவு செய்தது. இதனால், கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் வழக்கமாக செல்லும் வாகனங்களும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிவரும் என எதிர்ப்பு கிளம்பியது. மாற்று இடத்தில் சுங்கச்சாவடியை அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில்அறிவுறுத்தப்பட்டும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மறுத்து விட்டதால் 2012-ம் ஆண்டில் இத்திட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து, அவசியத் தேவைஎன்ற அடிப்படையில், நீலாம்பூருக்கு பதிலாக காரமடை அடுத்த குட்டையூரிலிருந்து தொடங்கி ஏற்கெனவே திட்டமிட்டபடி 7.5 கி.மீ. தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்க மாநில நெடுஞ்சாலைத் துறையால் 2013-ம் ஆண்டு முடிவுசெய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, தொடர்ந்து பணிகள் நடைபெற்றன.

பெரும்பாலான பணிகள் நிறைவுபெற்றுவிட்ட நிலையில், 8 ஆண்டுகள் கழித்து இத்திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை மீண்டும் தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் மாநில நெடுஞ்சாலைத் துறை கடந்த பிப்ரவரியில் ஒப்படைத்துள்ளது. மேட்டுப்பாளையம் புறவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கமத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தற்போது தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனால் திட்டம் நிறைவேற 6 ஆண்டுகள் வரை கால தாமதமாகலாம் என்பதால், மாநில அரசேநிறைவேற்ற வேண்டும் என மேட்டுப்பாளையம் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, கோவை கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலாளர்கே.கதிர்மதியோன் கூறும்போது, “மேட்டுப்பாளையம் புறவழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் உட்பட 95 சதவீதம் பணிகளை மாநில நெடுஞ்சாலைத் துறை முடித்து விட்டது.

நில உரிமையாளர்களுக்கு பணம் அளித்து விட்டு, சாலையை அமைப்பது மட்டுமே மிச்சம். ஆனால் நிலத்துக்கான தொகை அதிகமாக இருப்பதால் இத்திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை வசம் அளித்துவிட்டனர். இது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தெரிய வந்துள்ளது. இதற்கு பிறகு தேசிய நெடுஞ்சாலைத் துறை மீண்டும் முதலில் இருந்து பணியைத் தொடங்குவார்கள். இதனால் திட்டம் நிறைவேற மேலும் 6 ஆண்டுகள் வரை ஆகும். 6 ஆண்டுகள் கழித்து நிலத்தின் விலை மேலும் உயரும். அப்போது தேசிய நெடுஞ்சாலைத் துறையும் திட்டத்தை இதேபோல கைவிட்டால் என்ன செய்ய முடியும்? மக்களின் துயரம் மட்டும் தொடரும். இதனைக்கருத்தில் கொண்டு மாநில அரசேஇத்திட்டத்தை விரைவாக நிறைவேற்றி முடிக்க வேண்டும். இது தொடர்பாக, மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்றார்.

தேசிய நெடுஞ்சாலைகள் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கடந்த பிப்ரவரி மாதம் மேட்டுப்பாளையம் புறவழிச்சாலை திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இது ஆரம்ப நிலையிலேயே உள்ளது” என்றனர்.

SCROLL FOR NEXT