வரதராஜ பெருமாள் கோயிலின் வைகாசி பிரம்மோற்சவம், வரும் 19-ம் தேதி அதிகாலை கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.
காஞ்சிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஆண்டு பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந் நிலையில், இந்த ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம் வரும் 19-ம் தேதி அதிகாலை 4.20 மணி முதல் 5.30 மணிக்குள் கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.
21-ம் தேதி அதிகாலை கருட சேவை உற்சவமும், 25-ம் தேதி திருத்தேர் உற்சவம் மற்றும் அதி காலை 2.15 மணி முதல் 3 மணிக் குள் உற்சவர் வரதர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் திருத்தேர் மீது எழுந்தருளும் உற்சவமும் நடைபெற உள்ளன. பிரசித்தி பெற்ற அத்திவரதர் குடிகொண்டுள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
இதையொட்டி, கிழக்கு ராஜ கோபுரம் பகுதியில் பிரம்மாண்ட பந்தல், நாள்தோறும் சுவாமி ஊர்வலம் நடைபெற உள்ள கோயிலின் உட்பிரகாரத்தில் அலங் கார பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. உற்சவம் தொடங்க உள்ள நிலையில், ஏராளமான வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின் றனர்.
பிரம்மோற்சவத்துக்கான முன்னேற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) தியாகராஜனும், டிஎஸ்பி நாத் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.