மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கடற்கரை கோயிலின் வடக்கு பகுதியில் உள்ள கடற்கரையில் ஒதுங்கியுள்ள பழங்காலத்து சிற்ப சிதறல்கள், கல்தூண்கள், கட்டிட சிதறல்களை உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்லும் நிலையில், தொல்லியல் துறை அவற்றை மீட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலைகளை பறைசாற்றும் சிற்பங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு உட்பட பல்வேறு குடவரை சிற்பங்கள் அமைந்துள்ளன. பாரம்பரிய சிற்பங்களான இவற்றுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால், தொல்லியல் துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. இவற்றைக் கண்டு ரசிக்க உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் வந்து செல்வதால், சர்வதேச சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.
மேலும், இங்கு, 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதும் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும் விளங்கும் ஸ்தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கடற்கரை கோயில் போன்று மேலும் 6 கோயில்கள் இருந்ததாகவும், அக்கோயில்கள் இயற்கை சீற்றத்தில் கடலில் முழ்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தொல்லியல் துறையினர், வரலாற்று ஆய்வாளர்கள் மாமல்லபுரத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடற்கரை கோயிலின் வடக்கு திசையில் உள்ள கடற்கரையில் பழங்காலத்து சிற்பங்களின் சிதறல்களான கல்தூண்கள், கல் கலசம், கட்டிட சிதறல்கள், சிற்ப வடிவமைப்புகளை தாங்கிய கருங்கற்கள் நேற்று முன்தினம் இரவு கரை ஒதுங்கியுள்ளன. இவற்றை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். மேலும்,கரை ஒதுங்கியுள்ள சிற்ப சிதறல்களை தொல்லியல் துறை அதிகாரிகள் நேரில்பார்வையிட்டு ஆய்வுக்காக எடுத்துச்செல்லும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து, தொல்லியல் துறைஅலுவலர்கள் கூறியதாவது: கடற்கரையில் ஒதுங்கியிருக்கும் கலசங்கள், தூண்கள், செங்கல் சிதறல்கள் சுற்றுச்சுவர் போன்று தெரிகிறது. மேலும், கோயிலைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட சேதமடைந்த கட்டிடம்போன்றும் தெரிகிறது. கரை ஒதுங்கியிருப்பது பழங்கால கோயில் சிற்பங்கள்தான் என தற்போது உறுதியாகக் கூற முடியாது. தொல்பொருள் ஆய்வாளர்கள், சென்னை பல்கலை. கட்டிடக்கலை பேராசிரியர் கொண்ட ஆய்வுக் குழுவினர் மூலம் ஆய்வு செய்த பின்புதான் உறுதிப்படுத்த முடியும் என்றனர்.