தமிழகம்

தனியாரிடம் மின்சாரம் வாங்கும் பழைய நடைமுறை தொடரவேண்டும்: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

செய்திப்பிரிவு

கோவை: தொழில் நிறுவனங்கள் தனியாரிடம் மின்சாரம் வாங்க ஏற்கெனவே உள்ள நடைமுறையை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரு மெகாவாட்டுக்கும் கீழ் இயங்கும் தொழில் நிறுவனங்கள் ‘ஒபன் ஆக்சஸ்’ முறையில் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க அனுமதிக்கும் வசதியை திரும்பப் பெறுவது தொடர்பான அரசாணையை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 17-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இவ்வாறு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தை ரத்து செய்தால் கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும். தொழில் நிறுவனங்களுக்கு தற்போது மிச்சமாகும் பல லட்சங்கள் மின்சாரத்துக்கான கட்டணம் செலவாக மாறி விடும். மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சினையால் சிக்கலில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு இது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால், தமிழக அரசானது தனியாரிடம் மின்சாரம் வாங்க ஏற்கெனவே உள்ள நடைமுறையை பின்பற்ற தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க (டான்சியா) துணைத் தலைவர் எஸ்.சுருளிவேல் கூறும்போது, “தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து மின்சாரம் வாங்கும்போது உயர் மின்னழுத்த கட்டணம் ஹெச்.டி. யூனிட்டுக்கு ரூ.5.70, எல்.டி.சி.டி.-க்கு ரூ.7 செலவாகிறது. ஆனால் தனியார் நிறுவனங்களிடமிருந்து யூனிட்டுக்கு ரூ.5-க்கு கீழ் கிடைக்கிறது. இதனால் பெரிய நிறுவனங்களுக்கு பல லட்சம் மிச்சமாகிறது. எனவே, தமிழக அரசு தனியாரிடம் மின்சாரம் வாங்க ஏற்கெனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும். இதுதொடர்பாக தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத்தின் (டீகா) தலைவர் அசோக் கூறும்போது, “ஒரு மெகாவாட்டுக்கு கீழ் உள்ள தொழில் நிறுவனங்கள் ஒப்பந்த முறையில் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க அனுமதிக்கும் வகையில் கடந்த 2010-ல் ஏற் படுத்தப்பட்ட சட்டத் திருத்தத்தால் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் பயன் பெற்று வருகின்றன. இந்த சட்டத்தை திரும்பப் பெற்றால் தொழில் நிறுவனங்கள் நெருக்கடி நிலையை சந்திக்க நேரிடும். நடைமுறையில் உள்ள கொள்கை முடிவை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT