சென்னை: தமிழக அரசின் நீட் தீர்மானத்தை குடியரசுத் தலைருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து வரும் 28-ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து தமிழக மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, மக்களிடையே எழுந்த எதிர்ப்பு காரணமாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் செய்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு தமிழக அரசை முடக்கும் நடவடிக்கையை கண்டித்துத் தான் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவதை முதிர்ச்சி இல்லாமல் பேசுவதாக கருதுகிறேன்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்பாமல் இருப்பது தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் செயலாகும். ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை மறுபடியும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி 72 நாட்களாகியும், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் முடக்கி வைப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. தமிழக ஆளுநரின் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரும் 28-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.
விவசாயிகளுக்கான இலவசங்கள் மற்றும் அவர்கள் உற்பத்தி செய்யும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க கூடாது என்றும் பயிர் காப்பீட்டு திட்டங்களால் மத்திய அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுவதாகவும் நிதி ஆயோக் உறுப்பினர் கூறியிருப்பது பாஜக அரசின் விவசாயம் உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கையை உறுதிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.