தமிழகம்

மதுரை காமராஜர் பல்கலை.யில் தினக்கூலி பணியாளர்களின் பணிநீக்க உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி பணியாளர்கள் 136 பேரின் பணிநீக்க உத்தரவை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய 136 தொகுப்பூதிய மற்றும் தினக்கூலிப் பணியாளர்கள், அந்தந்த துறைத் தலைவர்களின் வாய்மொழி உத்தரவின் மூலம் கடந்த 8-ம் தேதி திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பணி நிரந்தரத்துக்காக காத்திருந்தவர்களை முன்னறிவிப்பின்றி திடீரென பணிநீக்கம் செய்திருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது. பல்கலை.க்காக உழைத்தவர்கள் தற்போது சாலையில்அமர்ந்து போராடும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

பணி நிரந்தரமற்ற ஊழியர்கள் என்பதால் இவர்களுக்கான சம்பளமே குறைவுதான். சொற்ப சம்பளத்தில் செய்துவந்த வேலையும் பறிபோனதால் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். முழு கல்வித் தகுதியுடன், இத்தனை ஆண்டுகள் அனுபவமும் உள்ள இந்தப் பணியாளர்களை, நிதிநிலையை மட்டும் காரணம்காட்டி தற்போது வெளியேற்றுவதில் நியாயம் இல்லை.

இந்த 136 பேரில் நிறைய பெண்கள், மாற்றுத் திறனாளிகளும் உள்ளனர். இவர்கள் மீண்டும் வேலை தேடி அலைந்தாலும், மாற்றுப் பணி கிடைப்பது அரிதாகும்.

இதையெல்லாம் தமிழக அரசு கருணையுடன் பரிசீலித்து, பணி நீக்க உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும். இத்தகைய பணிகளில் இருப்போரின் பணிப் பாதுகாப்பு, பணி மூப்பு மற்றும் பணி நிரந்தரம் குறித்த நெறிமுறைகளை பல்கலைக்கழகங்களுக்கு வகுத்து, நடைமுறைப்படுத்துவதை அரசு கண்காணிக்க வேண்டும். எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT