தமிழகத்தில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருணாநிதி அளித்த பேட்டியில் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள், அறிக்கை, கூட்டணி ஆட்சி, மதுவிலக்கு கொள்கை குறித்த பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது:
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராக உள்ளனர். எனவே, வரும் மே 16-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தனிப்பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைக்கும். எனவே, தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
திராவிட இயக்கம் வெறும் அரசியல் இயக்கம் அல்ல. அதன் சமுதாயப் பணிக்கு என்றுமே முடிவு கிடையாது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக எந்தக் கட்சியும் இல்லை. நாங்கள்தான் மாற்று எனக் கூறி களமிறங்கி யுள்ள அணியை நாங்கள் சவாலாக கருதவில்லை. தேர்தல் களத்தில் 3-வது அணி என்று எதையும் பார்க்க முடியவில்லை.
மதுவிலக்கு அமல்படுத்துவோம்
1971 திமுக ஆட்சியில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் திமுக ஆட்சியில் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு அதிமுக ஆட்சியில்தான் மது விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்துள்ளோம். திமுகவின் நல்ல நோக்கத்தை திசை திருப்ப முதல்வர் ஜெயலலிதா முயற்சி செய் கிறார்.
மதுவிலக்கு பிரச்சினையில் திமுகவின் நல்ல நோக்கங்களை திசைதிருப்பும் வகையில் எதிரணியினர் விமர்சனம் செய்கின்றனர். எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுவதுபோல திமுக வினர் மதுபான ஆலைகளை நடத்தினால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதனை மூடுவோம்.
திமுக மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது தவறான பிரச்சாரம். திமுக என்ற இயக்கமே இளைஞர்களால் உருவானதுதான். இன்றும் திமுகவில் இளைஞர்களே நிறைந்துள்ளனர். திமுகவின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் இளைஞர்களை அதிக அளவில் காண முடிகிறது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.