செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் உறவுக்கு முக்கியத் துவம் கொடுப்பதா? அல்லது கட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதா? என்ற பாமகவினர் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநிலத் தலைவர் எம்.கிருஷ்ணசாமி மகன் எம்.கே.விஷ்ணுபிரசாத் போட்டி யிடுகிறார். இவர், பாமக இளை ஞரணித் தலைவரும் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியாவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். இந்த “ரத்த பந்த(ம்)” உறவுமுறையால் பாமகவினர் விழிபிதுங்கி உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது, “2006 மற்றும் 2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் பாமக இடம் பெற்றிருந்தது. அதனால், 2 தேர்தல்களிலும் செய் யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து பாமகவினர் முழுவீச்சில் பணியாற்றினர். அதற்கு, பாமக தலைமையும் முழுசுதந்திரம் வழங்கியது.
இதே கண்ணோட்டத்தில், 2009-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவினர் பணி யாற்றினர். அப்போது, அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றது. திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியை உள்ளடக்கிய வந்தவாசி நாடாளுமன்றத் தொகுதி யில் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பாமக நிறுவனர் ராமதாஸின் சம்பந்தியும், அன்புமணியின் மாமனாருமான தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.
அவருக்கு ஆதரவாக, பாமக செயல்பட்டதாக வெளியான தகவலால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதன்விளைவு போட்டியிட்ட 7 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பாமக வெற்றி பெறவில்லை. அதன் பின்னணியில் அதிமுக தலைமை இருந்ததாக பாமகவினர் புலம்பினர். அதேபோல், வந்தவாசி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட என்.சுப்ரமணியன், 1 லட்சத்து 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந் தார். இதனால், பழைய மன ஓட்டத்திலேயே தற்போதும் பாமக வினர் உள்ளனர்” என்றனர்.
இது குறித்து பாமக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “அதுபோன்ற எண்ணம் எதுவும் இல்லை. உறவு வேறு, கட்சி வேறு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஆரணி தொகுதியில் (தொகுதி சீரமைப்புக்கு பிறகு வந்தவாசி நாடாளுமன்றத் தொகுதி ஆரணி தொகுதியானது) போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி இரண்டரை லட்சம் வாக்குகள் பெற்றார். அதே தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஷ்ணுபிரசாத் 27 ஆயிரம் வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். இந்தத்தேர்தலில், பாமகவின் வாக்கு வங்கியை நிரூபிப்போம்” என்றார்.
மூத்த நிர்வாகியின் கருத்துக்கு பதில் அளித்துள்ள செய்யாறு பாமகவினர், “நாடாளுமன்ற தேர் தலில் ஏ.கே.மூர்த்தி போட்டியிட்டார். விவரமானவர். தொகுதி முழுவதும் வலம் வந்தார். பாமகவினரின் நாடித் துடிப்பை அறிந்தவர். அதனால், இரண்டரை லட்சம் வாக்குகள் பெற்றார். அவருடன், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் சீனிவாசனை ஒப்பிட முடியாது” என்றனர்.