தமிழகம்

கோழி நோயை கண்டறிய தரமான ஆய்வகம்: தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: குஜராத்தில் சர்தார் சரோவர் நீர்த்தேக்கம் அருகே நடந்த அனைத்து மாநில கால்நடை பராமரிப்பு, மீன்வளத் துறைகளுக்கான கோடை சந்திப்புநிகழ்ச்சியில் தமிழக மீன்வளம், மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:

ஆதரவற்ற பெண்களுக்கு 5 ஆடுகள் வழங்கும் திட்டம்தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வண்ணமீன் ஏற்றுமதியில் தமிழகம் 2-வது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது.

எம்.பி. கனிமொழியும், கால்நடைத் துறை கூடுதல் தலைமைச் செயலரும் முன்வைத்த கோரிக்கைகளின்படி, தமிழ்நாட்டில் கோழி நோய்களைக் கண்டறியும் தரமான உயிர் பாதுகாப்பு ஆய்வகம் ரூ.103.45 கோடியில் நாமக்கல் மாவட்டத்தில் நிறுவ வேண்டும். கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலையத்தில் கோமாரி நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி ஆய்வகம், கோமாரி நோய் தடுப்பூசி சோதிக்கும் வசதி ரூ.146.18 கோடியில் நிறுவ வேண்டும்.

கால்நடை நிலையங்களின் உள்கட்டமைப்புகளை ரூ.311.31 கோடியில் மேம்படுத்த வேண்டும். பல்வேறு திட்டங்களுக்குத் தேசிய பசுவின இயக்கத்தின் கீழ் ரூ.87.63 கோடி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய பால்வளம், மீன்வள துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, கால்நடை பராமரிப்பு இணை அமைச்சர் சஞ்சீவ்குமார் பல்யான், மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர். l

SCROLL FOR NEXT