தமிழகம்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தைச் சந்தித்துவிட்டுத் திரும்பி வரும்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சில கட்சியினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு அதிமுக, தமாகா,பாஜக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துஉள்ளனர். அதன் விவரம் வருமாறு:

வாகனம் மீது தாக்குதல்

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறையில் உள்ளதருமபுர ஆதீனத்தைச் சந்தித்துவிட்ட திரும்பி வரும் வழியில், ஒருசில சமூக விரோதிகள் கற்களையும் கருப்புக் கொடிக் கம்பங்களையும் கொண்டு அவர் சென்றவாகனங்களின் மீது கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

தமிழகத்திலேயே ஆளுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும், தமிழகத்துக்குள்ளேயே ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கெடு அடைந்துள்ளதை காட்டுகிறது. ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களுக்கு இந்த அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்யவேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதை அதிமுக ஒருபோதும் ஏற்காது. இதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இந்த சம்பவத்துக்கு காவல்துறை தனது கையில் வைத்துள்ள முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார்.

தமிழக அரசே பொறுப்பு

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஆளுநர் செல்லும் பாதையில் கருப்புக் கொடி காட்ட ஒருகூட்டம் தயாராக இருப்பது தெரிந்தும், ஆளுநருக்குக் கொடுக்க வேண்டிய பாதுகாப்பில் தமிழகஅரசு பொறுப்புடன் செயல்படவில்லை. இந்த சம்பவத்துக்குத் தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். ஆளுநர் சென்ற வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் நம்பிக்கையை இழந்தார்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: கடந்த 3 நாட்களாக திமுக தலைவர்கள் கொடுத்த ஊக்கத்தினால் ஆளுநர் மீது திமுக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாட்டின் உயரிய பொறுப்பில் உள்ள ஆளுநருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால், அன்றே பொதுமக்களின் நம்பிக்கையை முதல்வர் இழந்து விட்டார் என்று அர்த்தமாகும்.

எனவே, இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநரிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். இல்லையென்றால் பதவி விலக வேண்டும். இந்த 2 வாய்ப்புகள்தான் அவருக்கு உள்ளது. தொடர்ந்து, தமிழக ஆளுநர் மீது ஆளும்கட்சியினரும், அதன் தலைமையும் வெளிப்படுத்தும் வெறுப்பும்,எதிர்ப்பும், நடைபெற்ற சம்பவத்துக்கு உள்நோக்கம் இருக்குமோஎன்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பாஜக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளுநருக்குப் பாதுகாப்பு நடவடிக்கை ஏன் சரியாக எடுக்கவில்லை என்று விளக்கம் கேட்குமாறு உள்துறை அமைச்சகத்திற்குக் கடிதம் எழுதி இருக்கிறோம். இனியாவது மாநிலத்தின் வளம் கருதி மக்களின் நலன் கருதி தமிழக முதல்வர் தனது அணுகு முறையை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறேன்.

இதேபோன்று, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT