தென்காசி: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்காததால், நாளொன்றுக்கு ரூ.67 லட்சம் மதிப்பிலான துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவிலில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 20 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் பாதிப்பை சந்தித்துள்ளது.
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி நேற்று முதல் சங்கரன்கோவிலில் விசைத்தறிகள் தொழில் நிறுத்தம் தொடங்கியது. வரும் 30-ம் தேதி வரை இப்போராட்டம் நடைபெறுகிறது.
மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேஷன், டெக்ஸ்டைல் வீவர்ஸ் அசோசியேஷன் சார்பில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். தமிழகமுதல்வருக்கு, அவர்கள் அனுப்பிஉள்ள மனுவில், ‘சங்கரன்கோவிலில் நாளொன்றுக்கு ரூ.67 லட்சம்மதிப்பிலான துணி உற்பத்தி மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.1கோடி ஜிஎஸ்டி வரி செலுத்தப்படுகிறது. மூலப்பொருளான பருத்தி நூல் மாதத்துக்கு ரூ.10கோடி மதிப்பில் கொள்முதல்செய்யப்படுவதன் மூலம் ரூ.50 லட்சம் ஜிஎஸ்டி செலுத்தப்படுகிறது. விசைத்தறி தொழிலுக்கான நூல் விலை கடந்த ஆகஸ்ட் 2020-ல் ரூ.1,455 ஆக இருந்தது. தற்போது ரூ.2,385 ஆக உள்ளது. இதற்கேற்ப உற்பத்தியாகும் சேலைகளின் விலையை உயர்த்த முடிய வில்லை.
மத்திய அரசு இறக்குமதி பருத்தி மீதான வரியை 11% ரத்து செய்தாலும், ஏற்றுமதியை தடை செய்யாதவரை விலை குறையாது. நூல் உற்பத்தியாளர்கள் தன்னிச்சையாக முடிவு எடுத்து விலையை உயர்த்துகின்றனர். அரசு தலையிட்டு நூல் ஏற்றுமதி செய்வதை தடுக்க வேண்டும். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக நூல் ஆலை உரிமையாளர்கள், நூல் உபயோகிப்பாளர், அரசுத் தரப்பு அடங்கிய முத்தரப்பு நூல் விலை கட்டுப்பாட்டுக் குழுவை அமைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.