உதகை: தொடர் விடுமுறை மற்றும் கோடை சீசன் தொடங்கியுள்ளதால், உதகையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து மட்டுமின்றி கேரளா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் குவிந்துள்ளனர்.
உதகையில் அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் வாரயிறுதி என கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 60,000 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதேபோல, உதகை படகு இல்லம், அரசினர் ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், மரவியல் பூங்கா ஆகியவற்றுடன், வனப்பகுதிகளை ஒட்டியுள்ள சுற்றுலா மையங்களிலும், தனியார் கேளிக்கை பூங்காக்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்டம் அதிகரித்ததால் நகரின் பெரும்பாலான சாலைகள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டன.
இந்நிலையில், விடுமுறை முடிந்த நிலையிலும் உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்ப, மலை மாவட்டமான நீலகிரிக்கு சமவெளிப் பகுதி மக்கள் வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குளிர் பிரதேசமான நீலகிரி மாவட்டத்திலும் கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கிறது.
இதுதொடர்பாக உபாசி வேளாண் விஞ்ஞானிகள் கூறும்போது, "உதகை, குன்னூரில் கோடை காலத்தின் வெப்பநிலை 17 முதல் 22 டிகிரி செல்சியஸாக இருந்து வந்தது. இந்நிலையில், வனப்பரப்பு குறைந்துவிட்டதாலும், சுற்றுச்சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும் தட்ப,வெட்பம் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கோடை காலத்தில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக பதிவாகி வருகிறது.
இதன் காரணமாக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பகல் நேரங்களில் மின் விசிறி பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தாண்டு மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடை மழை பெய்யாவிட்டால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிப்பதோடு, நீர்நிலைகள் வறண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்" என்றனர்.