சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இந்த ஆண்டுக்கான பார்த்தசாரதி சுவாமி பிரம்மோற்சவ விழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா வருகிறார்.
இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை நேற்று நடந்தது. அதிகாலை 5 மணி அளவில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். சிங்கராச்சாரி தெரு, தேரடி தெரு, வடக்கு குளக்கரை தெரு, தெற்கு மாட வீதி உள்ளிட்ட தெருக்களின் வழியாக வீதிஉலா வந்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, காலை 11.30 மணி அளவில் ஏகாந்த சேவை நடைபெற்றது.
இன்று சூரிய பிரபை, சந்திர பிரபை, நாளை நாச்சியார் திருக்கோலம் ஆகிய உற்சவங்கள் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்கு நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.