வானகரத்தில் நேற்று கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழாவை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், பெரும்புதூர் தொகுதி எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் தொடங்கி வைத்தனர். 
தமிழகம்

கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்டம் மூலம் 8.64 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்டத்தின் மூலம் இதுவரை 8.64 லட்சம் பயன் பெற்றுள்ளனர் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், வானகரத்தில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழா நடைபெற்றது.

இதை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், பெரும்புதூர் தொகுதி எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்டம் தொடங்கப்பட்ட கடந்த 9 மாதங்களில் இதுவரை 1,248 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், 8.64 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.

மத்திய அரசு அறிவித்த வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழா ஏப். 18-ம் தேதி (நேற்று) தொடங்கி வரும் 30-ம் தேதி வரை 385 இடங்களில் நடைபெற உள்ளது. காலை 8 மணி முதல் 4 மணி வரை இந்த முகாம் நடைபெறும்” என்றார்.

பால்வளத் துறை அமைச்சர் நாசர் பேசும்போது, “தமிழக முதல்வர் ஒரு மிகப் பெரிய கட்டமைப்பை உருவாக்கி, அந்தக்கட்டமைப்பு மூலம் கடந்த 10 ஆண்டு காலமாக செயல்படுத்தாமல் இருந்த மருத்துவ திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உலகத் தரம் வாய்ந்த மருத்துவ நிர்வாகத்தை உருவாக்கியுள்ளார்” என்றார்.

பெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு தனது உரையில், ‘‘இச்சுகாதாரத் திருவிழா மூலம், அதி நவீனபரிசோதனை சாதன வசதிகள் கிராம மக்களுக்கு கிடைக்கச் செய்வதையும், நோய் பாதித்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சைஅளிப்பதையும், அதைத் தொடர்ந்து பரிந்துரையின் பேரில்தொடர் நடவடிக்கை எடுப்பதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இத்திருவிழா நடத்த ஒருமுகாமுக்கு ரூ. 1 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ க.கணபதி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், சுகாதாரப் பணி இணை இயக்குநர்கள் கே.ஆர்.ஜவஹர்லால் (திருவள்ளூர்), செந்தில்குமார் (பூந்தமல்லி), மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT