காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க கௌரி அம்பாள் உடனுறை வராகீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலின் குடமுழுக்கு விழா கடந்த 14-ம் தேதி யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. யாக சாலை பூஜையில் நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து நேற்று பூர்ணாஹூதி நிறைவு பெற்று யாக சாலையில் இருந்து புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. ராஜகோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டதைத் தொடர்ந்து மூலவருக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இந்த விழாவில் இந்து சமய அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரகஉதவி ஆணையர் முத்து ரத்தினவேலு, ஆய்வாளர் பிரித்திகா, கோயில் செயல் அலுவலர் பூவழகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த குடமுழுக்கு விழாவையொட்டி கோயில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.