தமிழகம்

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து பொய் பிரச்சாரம் செய்வதா? - ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் கண்டனம்

செய்திப்பிரிவு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து முதல்வர் ஜெயலலிதா பொய் பிரச்சாரம் செய்வதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஃபுளோரைடு பாதிப்பில் உள்ள மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட, தரமான குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக ஒகேனக் கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த 1997-ம் ஆண்டு திமுக ஆட்சியில் வடிவமைக்கப்பட்டது.

பின்னர், இத்திட்டத்துக்கு அதிக செலவாகும் என்பதால், ரூ.1,928.80 கோடிக்கு 2010-ம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி திருத்தப்பட்ட நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். திமுக ஆட்சி நிறைவடையும் நேரத்தில் இந்தத் திட்டத்தின் சுமார் 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டன.

ஆனால், தேர்தல் பிரச்சாரத்துக்காக தருமபுரி வந்த ஜெயலலிதா, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தான் நிறைவேற்றியதாக பொய் சொல்கிறார். இப்படி பொய் சொல்வதை முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT