தமிழகம்

மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிகளை மீறி ‘கிராவல் மண்’ அள்ளப்படுவதாக குற்றச்சாட்டு

டி.ஜி.ரகுபதி

கோவை: மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், விதிகளை மீறி கிராவல் மண் அள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் ‘மேடை மண்’ எனப்படும் ‘கிராவல் மண்’ அதிகளவில் கிடைக்கும். மேற்காணும் பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களில் இருந்து கிராவல் மண்ணை எடுக்க அரசு சார்பில் நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் மூன்றாண்டுகளுக்கு இந்த அனுமதியை ஒருவர் பயன்படுத்தலாம். இச்சூழலில் மேற்காணும் பகுதிகளில் விதிகளை மீறி கிராவல் மண் எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலர் வேணுகோபால் கூறியதாவது: மேட்டுப்பாளையத்தை சுற்றியுள்ள காளம்பாளையம், பொன்னேபாளையம், தோலம்பாளையம், தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, பிளிச்சி, காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் விதிகளை மீறி கிராவல் மண் அள்ளப்படுகிறது. அதாவது, 8 அடி அனுமதிக்கப்பட்டு இருந்தால் 13 அடிக்கு, 15 அடிக்கு தோண்டப்படுகிறது. சில இடங்களில் 20 அடி வரைக்கும் பொக்லைனை பயன்படுத்தி நிலத்தை தோண்டி மண்ணை அள்ளுகின்றனர். தினமும் டன் கணக்கில் மண்ணை டிப்பர் லாரிகளில் கடத்துகின்றனர். அனுமதிக்கப்பட்ட பட்டா நிலங்கள் மட்டுமின்றி, அதற்கு அருகேயுள்ள வனப் பகுதிகள், மலையடிவாரப் பகுதிகளில் தோண்டுவது போன்ற அத்துமீறல்களும் அரங்கேறுகின்றன.

காப்பு நிலங்களிலும் மண்ணை அள்ளுகின்றனர். இதனால் நீர் வழித்தடம் மாறுவதால், பாசனத்துக்கு உரிய நீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமுள்ளது. வனவிலங்குகளின் வழித்தடமும் மாறி, அவை ஊருக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதுபோன்ற கனிமவளத் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இதுகுறித்து வருவாய் துறையினரிடம் கேட்டபோது, ‘‘மண் அள்ளப்படும் இடங்களில் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறோம். விதிமீறல் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

கனிமவளத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் கிராவல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிராவல் மண் அதிகபட்சம் 2.30 மீட்டர் ஆழம் வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் கிடைத்தவுடன், சென்னையில் உள்ள கண்காணிப்புக் குழுவின் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல எங்களது குழுவினர் மூலம் தொடர்ச்சியாக ஆய்வு நடத்தப்படுகிறது. விதிகளை மீறுபவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என்றனர்.

SCROLL FOR NEXT