சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 50 டன் உரங்களை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் தினமும் 5 ஆயிரம் டன்னுக்கு மேல் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அவை கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு மலை போல் தேங்கின. இந்நிலையில் குப்பைகளை வகை பிரித்து, முடிந்தவரை மறுசுழற்சி செய்யவும் ஈர குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விற்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நேற்றும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் விற்பனை நடந்தது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:
ஒவ்வொரு நாளும் சுமார் 600 டன் வரை மக்கும் தன்மையுள்ள சமையலறை கழிவுகள், காய்கறி கழிவுகள் போன்ற ஈரக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. அவை 208 நுண் எருவாக்கும் மையங்கள் மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உள்ள குப்பையை எருவாக்கும் மையங்களுக்கு அனுப்பப்படுகிறது.
அங்கு கழிவுகள் அனைத்தும் பொடியாக நறுக்கப்பட்டு, பல்வேறு குழிகளில் கொட்டப்படுகிறது. 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை குப்பையை மக்கச் செய்யும் உயிரி திரவம் அவற்றின் மீது தெளிக்கப்படுகிறது. பின்னர் 40 நாட்களில் கழிவுகள் மக்கி, எருவாக மாறுகிறது. மொத்த கழிவுகளும் எருவாகும்போது, அதன் அளவு 10 சதவீதமாக குறைந்துவிடுகிறது.
அவை பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் இயற்கை உரமாக விற்கப்படுகிறது. இந்த இயற்கை உரம் வீடுகளில் உள்ள தோட்டங்களில் வளர்க்கப்படும் செடிகள், தொட்டிகளில் வளர்க்கப்படும் செடிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தல்படி, தமிழ்நாடு கூட்டுறவு இணையம் மூலமாக இதுவரை 300 டன் இயற்கை உரம் விற்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி மூலம் பாக்கெட்டுகளில், வீட்டு செடி வளர்ப்புக்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் மற்றும் வீடுகளுக்கு 50 டன் இயற்கை உரத்தை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் சாலை தீவுத்திட்டு பூங்காக்களுக்கும் இந்த இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வீடுகளுக்கு விற்கப்படும் இயற்கை உரம் ஒரு பாக்கெட் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. குப்பைகளை, குப்பைக் கிடங்குகளில் கொட்டுவதை குறைக்கும் வகையில் இவ்வாறு குப்பைகளை இயற்கை உரமாக மாற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயிகள் மற்றும் வீடுகளுக்கு 50 டன் இயற்கை உரத்தை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வீடுகளுக்கு பாக்கெட் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது.