தமிழகம்

போலி மனு, போலி உத்தரவால் நீதிபதி அதிர்ச்சி: ஸ்ரீவைகுண்டம் வேட்பாளர் மாற்றத்துக்கு நீதிமன்றத்தை பயன்படுத்திய அதிமுகவினர்

கி.மகாராஜன்

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மாற் றப்பட்டு, அமைச்சரை வேட்பாள ராக அறிவிக்கச் செய்ததில் உயர் நீதிமன்றத்தை ஒரு கருவியாக பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டவர் எம். புவனேஸ்வரன். கோவையில் வசித்துவரும் இவரது பூர்வீகம் ஸ்ரீவைகுண்டம். வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் குடும்பத் துடன் ஸ்ரீவைகுண்டத்தில் குடியேறி னார். இவரை ஆதரித்து, அருப் புக்கோட்டையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்ரீவைகுண் டம் தொகுதியில் புவனேஸ்வர னுக்கு வாக்களிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து தேர்தல் பணி யில் தீவிரம் காட்டி வந்த நிலை யில் இரு தினங்களுக்கு முன்பு புவனேஸ்வரன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக அமைச்சர் சண்முகநாதனே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கரூர் மாவட் டம், தென்மலை காவல்நிலை யத்தில் புவனேஸ்வரன் மீது கரூர் மாவட்டம், கோடாந்தூர் ஊராட்சித் தலைவர் ரவிசெல்வனை கொலை செய்ய முயற்சித்ததாக வழக்கு நிலுவையில் உள்ளதாக, அதிமுக தலைமைக்கு புகார் அனுப்பியதால் புவனேஸ்வரன் மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், புவனேஸ்வரன் மாற்றப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தை பகடைக் காயாக பயன்படுத்திய விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:

ரவிசெல்வனை கொலை செய்ய முயற்சித்ததாக 2012-ல் புவனேஸ்வரன் மீது தென்மலை காவல் நிலையத்தில் பதிவான (129/2012) வழக்கு 2014 ஜனவரி மாதம் புகாரில் உண்மையில்லை என முடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கரூர் 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் போலீஸார் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். ஏப். 4-ல் புவனேஸ்வரன் ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளராக அறிவிக் கப்பட்டார்.

இந்நிலையில், ரவிசெல்வன் பெயரில் உயர் நீதிமன்றக் கிளையில் கடந்த ஏப். 11-ல் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் புவனேஸ்வரன் மீதான கொலை முயற்சி வழக்கின் விசாரணையை விரைவில் முடித்து, நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு விசாரணைக்கு வராத நிலையில், உயர் நீதிமன்றத்தில் புவனேஸ்வரனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்ததாகவும், அதில் அந்த வழக்கை விரைவில் விசாரித்து உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸா ருக்கு உத்தரவிட்டிருப்பதாக வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது. இந்த தகவல் அதிமுக தலைமைக்கும் அனுப்பப்பட்டது. இதையடுத்தே புவனேஸ்வரன் மாற்றப்பட்டு, அமைச்சர் சண்முகநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

போலி கையெழுத்து

இந்தச் சூழலில் ரவிசெல்வன் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்ப பெறுவதாக உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இந்த மனு நீதிபதி பி.என். பிரகாஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது ரவிசெல்வன் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, ‘இந்த மனுவை தான் தாக்கல் செய்யவில்லை என்றும், எனது கையெழுத்தை போலியாக போட்டு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக நான் அனுமதி வழங்காதபோது, யாருடைய அனுமதியின்பேரில் இந்த மனுவை தாக்கல் செய்தீர்கள் எனக் கேட்டு மனு தாக்கல் செய்த வழக்கறிஞருக்கு கடிதம் அனுப்பியதாக’ தெரிவிக் கப்பட்டது.

புவனேஸ்வரன் தரப்பில், ‘ஏற்கெனவே முடிக்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாக பொய்யாக மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அது விசாரணைக்கு வராத நிலையில் அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாக தவறான தகவலை பரப்பியதால், தேர்த லில் போட்டியிடும் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக் கப்பட்டது. அரசியல் எதிரியை பழிவாங்க, நீதிமன்றத்தை ஒரு கருவியாக பயன்படுத்தியதை கேட்டு நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். இதுபோன்று போலியாக மனு தாக்கல் செய்வதற்கு கடிவாளம் போட வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். அதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி, விசாரணையை இன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT