தமிழகம்

திமுகவில் இணைந்த 2 அதிமுக கவுன்சிலர்கள்: மணப்பாறை நகராட்சியை கைப்பற்ற திமுக முயற்சி

செய்திப்பிரிவு

திருச்சி: அதிமுக கவுன்சிலர்கள் 2 பேர் திமுகவில் இணைந்துள்ளதால், மணப்பாறை நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றும் முயற்சியில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் அதிமுகவைச் சேர்ந்த 11 பேர், திமுகவைச் சேர்ந்த 8 பேர் மற்றும் காங்கிரஸ் 1, இந்திய கம்யூனிஸ்ட் 2, சுயேச்சைகள் 5 பேர் வெற்றி பெற்றனர். திமுக கூட்டணியும், அதிமுகவும் சமமான எண்ணிக்கையில் வார்டு உறுப்பினர்களை பெற்றிருந்த நிலையில், சுயேச்சை உறுப்பினர்கள் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால், மணப்பாறை நகராட்சித் தலைவர் பதவியை திமுக கைப்பற்றும் என்று கருதப்பட்டது.

இதையடுத்து, மணப்பாறை நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுகவின் கீதா மைக்கேல் ராஜ், அதிமுகவின் பா.சுதா போட்டியிட்டனர். மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலின்போது, திடீர் திருப்பமாக அதிமுகவின் சுதா 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கீதா மைக்கேல்ராஜ் 12 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். இதன்மூலம் மணப்பாறையில் நகராட்சித் தலைவர் பதவியை முதன்முறையாக அதிமுக கைப்பற்றியது.

இந்த சூழலில், அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களான செல்லம்மாள் (1-வது வார்டு), வாணி (13-வது வார்டு) ஆகிய இருவரும் நேற்று தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியைச் சந்தித்து தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இதன்மூலம் மணப்பாறை நகராட்சியில் திமுகவின் பலம் 10 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 1, இந்திய கம்யூனிஸ்ட் 2 மற்றும் சுயேச்சைகளின் ஆதரவும் இருப்பதால், விரைவில் தற்போதுள்ள தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அதன்மூலம் மணப்பாறை நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றும் முயற்சியில் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT