தமிழகம்

கல்விக்கடன் செலுத்தாதவர்கள் எஸ்பிஐ வங்கி தேர்வை எழுதக்கூடாது என்பதா? - ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

செய்திப்பிரிவு

கல்விக்கடன் செலுத்தாதவர்கள் எஸ்பிஐ வங்கியின் தேர்வினை எழுத முடியாதபடி நிபந்தனை விதித்துள்ளது கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாரத ஸ்டேட் வங்கியின் 17 ஆயிரத்து 140 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி களில் கடன் பெற்ற மாணவர் கள் அதை திரும்ப செலுத்த வில்லையென்றால், விண்ணப் பிக்க தகுதியில்லை என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இது கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் தேர்வு எழுதுவதை தடுக்கும் வகையில் போடப்பட்ட உத்தரவாகும். பாரத ஸ்டேட் வங்கியின் இந்த உத்தரவை சிபிஎம் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

வாய்ப்பை மறுக்கும் செயல்

பணிக்குச் சென்றால்தான் மாணவர்கள் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியும். ஆனால், வேலை கிடைக்கவில்லையென்றாலும் கடைசி தவணை முடிந்த ஒரு வருட காலத்துக்கு பிறகு வட்டியுடன் கடனை திருப்பிச் செலுத்தவேண்டும் என வங்கி நிர்வாகங்கள் நிர்பந்திக்கின்றன. வங்கிக் கடன் செலுத்தாத மாணவர்கள், வங்கித் தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்று கூறுவது அவர்களின் வேலை வாய்ப்பை மறுக்கும் செயலாகும். மேலும், மாணவர்களை கடனாளியாக்கும் முயற்சியும் கூட. இதனால், வங்கிகளுக்கும் கடன் சுமை கூடும்.

மாணவர்களின் கல்விக்கடனுக் கான வட்டியை மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட சதவீதம் மானியமாக வழங்குகிறது. இந்தத் தொகையை மத்திய அரசு செலுத்தவில்லை என்றாலும் கூட மாணவர்கள் முறையாக கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறி மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படுத்தப்படுகிறது.

அனைவரும் சமம்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 14-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘அனைவரும் சமம்’ என்பதற்கு இந்த உத்தரவு முற்றிலும் எதிரானதாகும். எனவே இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பாரத ஸ்டேட் வங்கியின் நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT