உலகம் முழுவதும் சமூக வலை தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. துனீசியாவில் மக்கள் புரட்சி ஏற்பட வித்திட்டது ‘ட்விட் டர்’தான் என்பார்கள். ஒபாமா, மோடி, கேஜ்ரிவால் போன்றவர்கள் அரசியலில் வெற்றிவாகை சூடியதற்கு ட்விட்டரை கையாண்ட விதம் முக்கிய காரணமாக சொல் லப்படுவதுண்டு. இப்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், ட்விட்டரிலும் ‘திருமங்கலம் ஃபார் முலா’வை அறிமுகப்படுத்தி நமது அரசியல்வாதிகள் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
திமுக, அதிமுக, மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, பாமக உள்ளிட்ட எல்லா கட்சிகளும் சமூக வலைதள பிரச்சாரத்தை முன்னெடுத் துள்ளனர். இதில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் சமூக வலைதள பிரச்சாரம், விளம் பரப் போட்டியில் முன்னிலை வகிக் கின்றன. இணையத்தில் தேர்தல் விளம்பரத்துக்கு யூடியூப் வீடியோ தளத்தை நாடியிருக்கிறது திமுக. யூடியூப்பில் வீடியோக்கள் தொடங் கும் முன்பு வரும் விளம்பரங் களில் திமுகவின் ‘முடியட்டும் விடியட்டும்’ விளம்பரத்தை ஒளி பரப்புகின்றனர். அதிமுகவோ, கூகுள் விளம்பரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. பல்வேறு இணைய தளங்களில் வரும் கூகுள் விளம் பரங்களில் அதிமுகவின் ‘VOTE FOR ADMK’ என்று ஜெயலலிதாவின் புகைப்படத்தோடு விளம்பரம் வருகிறது. இந்த 2 விளம்பரங்களுக்கு மட்டும் இரு கட்சிகளும் கோடி களில் வாரி இறைதிருப்பதாக கூறு கின்றனர்.
ட்விட்டரில் தொடரும் மோதல்
ட்விட்டர் தளத்தில் அதிமுக, திமுக ஆதரவாளர்களின் மோதல் களை அடிக்கடி காண முடிகிறது. ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளி யிட்டாலோ அல்லது பிரச்சார உரை நிகழ்த்தினாலோ அதை உடனே கலாய்த்து திமுக ஆதரவாளர்கள் ட்வீட் செய்கின்றனர். இப்படி ட்வீட் செய்பவர்களுக்கு என ஒரு குழுவே அமைத்து பணிபுரிந்து வருகிறது திமுகவின் இணையதளக் குழு. திமுக தரப்பில் ஒரு ட்வீட் கலாய்ப் புக்கு ரூ.200 கொடுப்பதாக தகவல் வெளியானது. அப்போது #திமுக200ரூபாய் என்ற ஹாஷ்டேக் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட்டானது குறிப்பிடத்தக்கது.
திமுக சார்பில் அதிமுகவை கலாய்த்து ட்வீட் செய்து வருபவரிடம் பேசியபோது, ‘‘எவ்வளவு பணம் தருகிறார்கள் என்பதெல்லாம் சொல்ல முடியாது. அதிமுகவை விமர்சித்து அதிகம் ஷேர் செய்யும் வகையில் அமையும் நல்ல மீம்ஸ் தயார் செய்பவர்களுக்கு ஒரு தொகையும் தொடர் ட்வீட்களுக்கு ஒரு தொகையும் கொடுக்கின்றனர். இதையே பலர் தற்காலிக, முழுநேர பணியாக செய்துவருகின்றனர். நான் மீம்ஸ் மட்டும் தயார் செய்து கொடுக்கிறேன்” என்றார்.
அதேபோல திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டா லினை கலாய்த்து அதிமுக ஆதர வாளர்களும் ட்வீட் செய்கின்றனர். திமுக கலாய்ப்பு ட்வீட் செய்யும் ஒருவரிடம் பேசியபோது, ‘‘ட்வீட் டுக்கு பணம் தருகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். எவ்வளவு என்றெல்லாம் இது வரை தெரிவிக்கவில்லை. காத்திருக் கிறோம்’’ என்றார்.
திமுக சார்பில் @jayafails என்ற ட்விட்டர் தளமும், அதிமுக சார்பில் @dmkfails என்ற ட்விட்டர் தளமும் கையாளப்பட்டு வருகிறது. இவ்விரண்டு பக்கங்களிலும் பரஸ் பரம் கலாய்ப்பு ட்வீட்கள், மீம்ஸ் களை மட்டுமே காணலாம்.
திமுக, அதிமுக இரண்டையும் கலாய்த்து, பாமக நிறுவனர் ராம தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு ஃபேஸ்புக் பக்கங்கள் இருக்கின்றன. ஆனால் அதிமுக, திமுக போல மற்ற கட்சிகள் முழு மையாக சமூக வலைதளத்தை உபயோகிக்கவில்லை.
இந்தத் தேர்தலில் அரசியல் தலைவர்களின் நேரடி பிரச் சாரத்தைவிட, சமூக வலைதள பிரச்சாரமும் கலாய்ப்பு ட்வீட்களும் தான் கட்சித் தொண்டர்கள் மற்றும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.