தமிழகம்

மதுரை | பாஜகவில் இணைந்து வரும் அதிமுக முக்கிய நிர்வாகிகள்: செல்லூர் கே.ராஜூவின் செயல்பாடு பிடிக்கவில்லை என புகார்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாநகர அதிமுகவில் சமீப காலமாக முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். மாநகரச் செயலாளர் செல்லூர் கே.ராஜூவின் மீதான அதிருப்திதான் இதற்கு காரணம் என்று அக்கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

செல்லூர் கே.ராஜூவின் தீவிர ஆதரவாளராக இருந்த மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கிரம்மர் சுரேஷ், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திடீரென்று அதிமுகவில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட்டார்.

அதன் பிறகு சமீபத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் செல்லூர் கே.ராஜூ வெற்றி வாய்ப்புள்ள பலருக்கு சீட் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் கவுன்சிலர் கண்ணகி பாஸ்கர் சுயேச்சையாக போட்டியிட்டார். முன்னாள் கவுன்சிலர்கள் ராஜா சீனிவாசன், லட்சுமி ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி பாஜக சார்பில் போட்டியிட்டனர்.

இந்நிலையில் அதிமுகவில் 3 முறை மாநகராட்சி கவுன்சிலராகவும், அதில் 2 முறை மண்டலத் தலைவராகவும் இருந்த கே.ஜெயவேல் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதற்கு முன்பு அவர் அதிமுகவில் பகுதி செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

இதுகுறித்து கே.ஜெயவேல் கூறியதாவது: நான் அதிமுகவில் இருந்து விலகியதற்கு முக்கிய காரணம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தான். அவர் சாதாரண வட்டச் செயலாளராக இருந்துதான் இன்று இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். ஆனால், அவர் கட்சியில் வேறு யாரையும் வளர விடுவதில்லை. என்னைப்போல் ஆர்வமாக வார்டுகளில் பணியாற்றும் நிர்வாகிகளை கட்சியிலிருந்து ஓரம்கட்டுகிறார். தேர்தலில் தன்னை மீறி சீட் பெற்ற கவுன்சிலர் வேட்பாளர்கள் பலரை செல்லூர் கே.ராஜூவே தோற்கடித்துள்ளார்.

அவரின் இந்த செயலால் மாநகர அதிமுக கரைந்து கொண்டிருக்கிறது.

செல்லூர் கே.ராஜூ மீது பலர் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் விரைவில் பாஜகவுக்கு வருவார்கள். இன்னும் 20 நாட்களில் மதுரை மாநகர அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. இனி தமிழகத்தில் பாஜகவுக்குத்தான் எதிர்காலம் உள்ளது. அக்கட்சியின் வாக்கு வங்கி ஒவ்வொரு வார்டிலும் உயர்ந்து கொண்டு வருகிறது. நான் திமுகவுக்கு சென்றிருந்தால்தான் அது அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்ததாக அர்த்தம். நான் அதிமுகவுடன் ஒருமித்த கொள்கை கொண்ட பாஜகவில்தான் சேர்ந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT