தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தின் எல்லைச்சாமியாக இருப்பேன்: கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்தின் எல்லைச்சாமியாக இருப்பேன் என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசினார்.

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு அமைப்பு தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம், விருதுநகரில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: தேர்தல் முறைப்படி நடைபெற அனைவரும் களப்பணியாற்ற வேண்டும். தலைமை இடுகின்ற கட்டளையை நாம் செய்து முடிக்க வேண்டும். நாம் இப்போது எதிர்க்கட்சியாக பணியாற்றி வருகிறோம்.

ஜெயலலிதா என்ற மாபெரும் தலைவி இல்லை என்ற ஏக்கப் பெருமூச்சு கட்சித் தொண்டர்களிடம் இருந்துகொண்டே இருக்கிறது. இருந்தபோதிலும் ஒவ்வொரு தொண்டனின் ரத்த நாளத்திலும் எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

வெற்றி, தோல்வி வீரனுக்கு அழகுதான். எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை இழந்திருக்கலாம். தோல்வி நமக்கு புதிதல்ல. தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்து வரலாறு படைக்கும். நான் இந்த மாவட்டத்தின் எல்லைச்சாமியாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்களான அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், மாநில மருத்துவ அணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மணிகண்டன், முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளருமான கே.வி.ராமலிங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT