தமிழகம்

மதுரையில் 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும்: சேடபட்டி முத்தையா பேச்சு

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் 10 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என திமுக தேர்தல் பணிக் குழு செயலாளர் சேடபட்டி முத்தையா தெரிவித்தார்.

மதுரை கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஒத்தக் கடையில் நேற்று நடைபெற்றது. மதுரை கிழக்கு ஒன்றியச் செயலரும், மேலூர் திமுக வேட்பாளருமான ஏ.பி.ரகுபதி தலைமை வகித்தார்.

அவர் பேசும்போது, கிழக்கு தொகுதியில் மூர்த்தி வெற்றிபெற்றால் அமைச்சராவது உறுதி. இந்த தொகுதி அதிமுக வேட்பாளர் தக்கார் பாண்டி எனது உறவினர். அவரது மனைவி கிழக்கு ஒன்றியத் தலைவராக உள்ளார். அவரது சொந்த ஊரான சிட்டம்பட்டியில் சமீபத்தில் தொற்றுநோய் பரவி பலர் பாதிக்கப்பட்டனர். சொந்த ஊரைச் சேர்ந்த மக்களை காப்பாற்ற தக்கார்பாண்டி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

தெற்கு மாவட்டச் செயலரும், திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளருமான மணிமாறன் பேசும் போது, திமுக தலைமை மதுரை கிழக்கு தொகுதியில் அதிக கவனம் செலுத்துகிறது. திருப்புமுனை மாநாடு இங்குதான் நடைபெற்றது. இப்பகுதியை சேர்ந்த ஏ.பி. ரகுபதி மேலூர் வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளார். இதனால் கிழக்கு தொகுதிக்கு இரு எம்எல்ஏக்கள் வரவுள்ளனர். திமுக வென்றால் அதிகாரம் மக்களை தேடி வரும் என்றார்.

வேட்பாளர் மூர்த்தி பேசும்போது, ‘5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சிப்பணியும் நடக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும். இந்த தொகுதிக்கு இவர் தான் வேட்பாளர் என முன்கூட்டியே தெரிவித்து சொல்லியபடியே அறிவித் தோம். சோழவந்தான் திமுக வேட்பா ளர் என்னை விட அதிக வாக்கு வித்தியா சத்தில் வெற்றிபெறுவார். அங்கு அதி முகவினரிடம் பணம் வாங்கிக் கொண்டு சிலர் திமுக வேட்பாளரை மாற்றக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்’ என்றார்.

திமுக தேர்தல் பணிக்குழுச் செயலர் சேடபட்டி முத்தையா பேசும்போது, ‘மாவட்டத்தில் 10 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும். கருணாநிதி மீண்டும் முதல்வராக பதவியேற்க அரும்பணியாற்ற வேண்டும் என்றார். கூட்டத்தில் காளிகாப்பான் பகுதி தேமுதிகவினர் திமுகவில் இணைந்தனர்.

மதுரை கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் பி. மூர்த்தி அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகிகள்.

SCROLL FOR NEXT