கடும் விலை சரிவு காரணமாக, சூளகிரி அருகே கனஜ்ஜூர் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட புதினாவை ஆற்றங்கரையோரம் வீசிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
தமிழகம்

சூளகிரி பகுதியில் புதினா விலை சரிவு: ஆற்றங்கரையோரம் வீசிய விவசாயிகள்

செய்திப்பிரிவு

சூளகிரி பகுதியில் புதினாவுக்கு உரிய விலை கிடைக்காததால், அறுவடை செய்யும் விவசாயிகள் ஆற்றங்கரையோரம் வீசினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டாரத்தில் சூளகிரி மற்றும் சுற்றுவட்டாரங்களில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் புதினா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு சாகுபடி செய்யப்படும் புதினா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கர்நாடக, கேரள, ஆந்திர மாநிலங் களுக்கும், நேரிடையாக புதுச்சேரி மாநிலத்துக்கும் லாரி, மினிலாரி உள்ளிட்ட வாகனங்களில் நாள்தோறும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.

கடந்த 2 மாதங்களாக புதினா விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சூளகிரி அடுத்த கனஜ்ஜூர் பகுதி விவசாயிகள் கூறும்போது, புதினா விலை கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து சரிந்து உள்ளது.

ஒரு ஏக்கரில் புதினா பயிரிட ரூ.25 ஆயிரம் செல வாகிறது. 90 நாட்களுக்குள் வளர்ந்து விளைச்சல் தரும் புதினாவுக்கு விலை இல்லாததால், செலவு செய்த பணம் கிடைக்குமா என்பதே கேள்விகுறியாக உள்ளது. 200 புதினா கட்டுகள் அடங்கிய ஒரு மூட்டை 1,000 ரூபாய் வரை விற்ற நிலையில் தற்போது மூட்டை, 100 ரூபாய்க்கு கூட விற்பதில்லை.

புதினாவை வாங்க வியாபாரிகளும் வராததால், அறுவடைக்கு தயாராக புதினா நிலங்களில் வீணாகி வருவதை தடுக்க, புதினா செடிகளை பறித்து ஆற்றங்கரையோரத்தில் கொட்டி வருகிறோம், என்றனர்,

SCROLL FOR NEXT